பேரிச்சை சாகுபடிக்கு மானியம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ராஜாமணி  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பேரிச்சம்பழம் ஒரு ஊட்டசத்து மற்றும்  நார்சத்து மிகுந்த ஆரோக்கியமான பழமாகும். உலக சந்தையில், இந்தியா கிட்டத்தட்ட  35 சதவீத பேரிச்சம் பழத்தை இறக்குமதி செய்கிறது. இந்தியாவில்  குறிப்பாக தமிழகத்தில் தேவை அதிகமாக இருப்பதால் பேரிச்சையை சாகுபடி செய்ய  விவசாயிகள் ஆர்வம்காட்டுகின்றனர். பொதுவாக பேரிச்சை அரபு நாடுகளில் உள்ள  பாலைவனங்களில் அதிகமாக வளரக்கூடியவை. ஆனால் இதர இடங்களிலும் பேரிச்சை  மரங்களை நல்லமுறையில் சாகுபடிசெய்யலாம். தமிழ்நாட்டில், வணிகரீதியாக  தர்மபுரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 100  ஏக்கர் பரப்பில் பேரிச்சை சாகுபடி செய்து விவசாயிகள் லாபம்  அடைந்துவருகின்றனர். தமிழ்நாட்டில் விவசாயிகள் பேரிச்சை சாகுபடி செய்வதை  ஊக்குவிப்பதற்காக, தோட்டக்கலைத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் தேசிய  வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் மூலமாக

2019-20ம் ஆண்டில் பேரிச்சை சாகுபடி  செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் என்ற வீதத்தில் மானியம்  வழங்கப்படுகிறது.
Advertising
Advertising

பேரிச்சையை, விதைகள் மற்றும் திசு வளர்ப்பு செடிகள் மூலமாக  சாகுபடி செய்யலாம். பொதுவாக ஹெக்டேருக்கு 175 செடிகள் என்ற விகிதத்தில்  நடலாம். நல்ல மகசூல் பெற, செயற்கை மகரந்த சேர்க்கை செய்வது அவசியமாகிறது.  பயிர் இழப்பை குறைப்பதற்காக சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சலாம்.  நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும்,  பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அரசால் வழங்கப்படுகிறது.  நன்றாக பராமரிக்கப்பட்ட சூழலில் சராசரியாக மரம் ஒன்றுக்கு 200 கிலோ முதல்  300 கிலோ வரை விளைச்சல் பெறலாம்.பேரிச்சை சாகுபடி பரப்பு நாளுக்கு நாள்  அதிகரித்துகொண்டே வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பேரிச்சை சாகுபடி செய்ய  மானியம் பெற, உழவன் செயலி மூலமாகவும், அந்தந்த மாவட்டத்திலுள்ள தோட்டக்கலை  துணை இயக்குநரையோ, வட்டார உதவி இயக்கு நரையோ, தோட்டக்கலை அலுவலர், உதவி  தோட்டக்கலை அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: