×

மார்த்தாண்டம் மேம்பால சாலையில் ஒட்டுபோடும் பணி

மார்த்தாண்டம், செப்.20: மார்த்தாண்டத்தில்  போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ₹220 கோடியில் இரும்பு மேம்பாலம்  கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த  பாலம் கட்டப்பட்ட சில நாட்களிலேயே பழுது ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே  காங்கிரீட் பெயர்ந்தது. தண்ணீர் செல்லும் பைப் உடைந்து விழுந்தது.  இதற்கிடையே பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. பல உயிர்  இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் டெம்போ நிலை தடுமாறி  தலைகீழாக கவிழ்ந்தது.  இவ்வாறு தொடர்ந்து விபரீத சம்பவங்கள் நடந்து  வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.  இந்நிலையில் பாலத்தில்  அமைக்கப்பட்டுள்ள தார் சாலை சேதமடைந்து மேடு பள்ளமாக காணப்படுகிறது.  இதனால் பாலத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  

இதுதொடர்பாக பொதுமக்கள் சார்பில் பல புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து  மேம்பாலத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் பெயர்ந்துள்ள தார் சாலையை சீரமைக்க  அங்கு ஒட்டுபோடும் பணி செய்ய உத்தரவிட்டனர். இதன்படி நேற்று ஓட்டுபோடும் பணி  தொடங்கியது. நேற்று காலை பணியாளர்கள் சாலையில் பெயர்ந்திருந்த  பகுதிகளில் தார் போட்டு ஓட்டினர்.  தென்னிந்தியாவிலேயே பெரிய இரும்பு  மேம்பாலம் கட்டப்பட்ட சில மாதங்களிலேயே பழுது ஏற்பட்டு ஒட்டுபோடும்  நிலைக்கு சென்றிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி  உள்ளது.

Tags : Marthandam ,road ,
× RELATED நேமம் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்