×

சாலை பணிகளுக்காக ஓடைகள் அடைப்பு வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடை பாதிப்பு சோகத்தில் குமரி மாவட்ட விவசாயிகள்: போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படுமா?

சுசீந்திரம், செப்.20:  குமரி  மாவட்டத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு 55 ஆயிரம் ஹெக்டேருக்கு  அதிகமான நிலத்தில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. சுமார் 82க்கும் அதிகமான  நெல் ரகங்களும் குமரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளன. இதேபோல் விவசாய பயன்பாட்டுக்காக சுமார்  4000க்கும் அதிகமான குளங்கள் இருந்தன. குமரி மாவட்ட மக்களின் ேதவைக்கு போக  மீதமாகும் நெல் கேரளம் மற்றும் வடதமிழ்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. காலப்போக்கில்  நெல் பயிரிடும் வயல்கள் வீட்டு மனைகளாகவும், அடுக்கு மாடி  கட்டிடங்களாகவும் மாற்றப்பட்டன. குளங்களும், நீர் நிலைகளும் ஆக்ரமிக்கப்பட்டன.  தற்போது சுமார் 2000 குளங்கள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. அதுவும்  ஆக்ரமிப்புகளாலும், தூர்வாரப்படாததாலும் நீர் பிடிப்பு பகுதிகள் மிகவும்  குறைந்து காணப்படுகின்றன. குளத்துக்கு தண்ணீர் செல்லும் ஓடைகள்  அடைக்கப்பட்டு ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான குளங்களில் கழிவு நீர்  தேங்கி பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலைக்கு சென்றுவிட்டன.   விவசாய நிலங்கள் ஆக்ரமிக்கப்பட்டு வருவதால் நெல் பயிரிடும் பரப்பளவு  படிப்படியாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு கன்னிப்பூ சாகுபடிக்கு சுமார்  3800 ஹெக்டேரில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த  ஆண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன்  பயிரிட்டனர். தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடை நடந்து வருகிறது.  இப்போதும் பருவமழை நீடித்து வருவதால் சில இடங்களில் அறுவடை  பாதிக்கப்பட்டுள்ளது. தேரூர் அருகே தத்தையார்குளம், புதுக்கிராமம், தேரூர்,  கீழதேரூர், நல்லூர், கீழபுத்தேரி ஆகிய இடங்களில் சுமார் 2000 ஏக்கரில்  நெல் பயிரிடப்பட்டுள்ளது. தத்தையார்குளம், புதுக்கிரமம், தேரூர்  பகுதிகளில் அறுவடை தொடங்கி உள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருவதால்  வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில்  உள்ள பயிர்கள் நாசமாகியதுடன் அறுவடையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது  விவசாயிகள் மத்தியில் கடுமையான மன சோர்வை ஏற்படுத்திஉள்ளது.
இந்த  நிலையில் இந்த பகுதி வழியாக நாற்கர சாலை செல்வதால் வயலில் தேங்கும் தண்ணீர்  வழிந்தோட முடியாத நிலை உள்ளது. நான்குவழி சாலைக்காகவும், கட்டுமான பணிக்கான  பொருட்கள் தேக்கி வைக்கவும் கால்வாய்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மாற்று  ஏற்பாடுகள் செய்யாததால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் தண்ணீர்  தேங்கி நிற்கிறது. நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீர் கிடப்பதால் அவை அழுகி  வீணாகி வருகிறது.

இந்த ஆண்டு கன்னிப்பூ சாகுபடி பரப்பளவு வெகுவாக  குறைந்துள்ளது. அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் தண்ணீரில் வீணாவது பெரும்  உணவு பஞ்சத்தை ஏற்படுத்தும் அபாய நிலையை உருவாக்கி உள்ளது. நெல் உற்பத்தி  குறைந்தால் உணவு பற்றாக்குறை ஏற்படுவதோடு, பல லட்ச ரூபாய் கடன் வாங்கி  பயிர் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே குமரி  மாவட்ட ேவளாண்மை துறை அதிகாரிகள் இந்த பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு  நடத்தி வயலில் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக கீழத்தேரூர் பகுதியை சேர்ந்த விவசாயி சொர்ணப்பன் என்பவர்  கூறியதாவது: தேரூர் பகுதியில் உள்ள விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடிக்காக ேலான்  வாங்கிதான் நெல் பயிரிட்டோம். இங்கு நடக்கும் நான்குவழி சாலை பணிக்காக ஓடைகளை அடைத்துவிட்டனர். இதனால் தண்ணீர் பாய்ந்தோட  முடியவில்லை. நிலம் காய்ந்தால் தான் அறுவடை செய்ய முடியும். மழையால் வயலில்  தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியவில்லை. இதனால் நெற்கதிர்கள்  தண்ணீரில் மூழ்கி பெரும் இழப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்த்து, வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Kumari ,district farmers ,tragedy ,
× RELATED குமரியில் இருந்து நெல்லை வழியாக 2 ரயில்கள் வட மாநிலங்களுக்கு இயக்கம்