விசா இன்றி வெளிநாட்டில் தவித்த வாலிபர் மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு

நாகர்கோவில், செப்.20: மலேசியாவிற்கு விசா இன்றி வாலிபரை வேலைக்கு அனுப்பி பணம் மோசடி செய்தவர் உள்பட 3 பேர் மீது  மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் லீமாறோஸ். இவரது மகன் ராம்போ பெனித் கிஷன். ராம்போ பெனித் கிஷனுக்கு  மலேசியாவில் ₹40 ஆயிரம் சம்பளத்தில், வேலை வாங்கி தருவதாக கொட்டாரத்தை அடுத்து சந்தையடியை சேர்ந்த முத்துலிங்கம் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய லீமாறோஸ் ராம்போ பெனித் கிஷனிடம் வேலைக்காக ரூ.1,25 லட்சத்தை கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கொடுத்துள்ளார். இதன்படி பணத்தை பெற்றுக் கொண்ட முத்துலிங்கம், ராம்போவை மலேசியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், விசா வழங்கவில்லை. விசா இல்லாதவர்கள் கைது செய்யப்படுவதை அறிந்த ராம்போ பயத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ள அறைக்குள் அடைந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல்அறிந்த லீமாறோஸ் மலேசியாவில் இந்திய தூதரகம் மூலம் அபாரதம் செலுத்தியுள்ளார்.
மேலும் ராம்போவின் பாஸ்போர்ட்டை வழங்க முத்துலிங்கத்தின் உறவினர் 500 மலேசியா பணம் வாங்கிக் கொண்டு இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளார். இதுபற்றி லீமாறோஸ் எஸ்பியிடம், தனது பணத்தை மீட்டுத் தருவதுடன், ஏமாற்றிய முத்துலிங்கத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் புகார் மனு அளித்தார். இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, முத்துலிங்கத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

59 பேரிடம் மோசடி
சிதறால் அருகே அம்பலக்கடையை சேரந்த கிறிஸ்துதாஸ் மகன் கின்சி(30). இவரது நண்பர் ஜான் ஸ்டாலின். இவர்கள் இருவரும், சிதறால் பகுதியில், மலேசியா மற்றும் புருனே நாட்டிற்கு கட்டுமான நிறுவனத்தில், சிவில் என்ஜினியரிங், மெக்கானிக்கல், எலக்கட்ரிக்கல் படித்தவர்களுக்கு ேவவை வாய்ப்பு இருப்பதாக, தலா ரூ.25 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வரை 66 பேரிடம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் யாரையும் அனுப்பி வைக்கவில்லை. இவரிடம், கட்டிமாங்கோடு கரிசல்விளையை சேர்ந்த சகாய சுபின் என்பவர், 1 லட்சத்து 70 ஆயிரம் மலேசியா செல்வதற்காக இரு தவணைகளாக பணம் கட்டியுள்ளார். இதற்காக டிக்கெட் விரைவில் வரும் எனக்கூறியுள்ளார். ஆனால் டிக்கெட் வரவில்லை. மேலும், கின்சியின் செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதுபோல்,  திங்கள்சந்தை பகுதிைய சேர்ந்த சங்கர், ரெவின் மற்றும் ஜெயராம் ஆகியோரும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். இதுகுறித்து இவர்கள் நான்கு பேரும், அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு எஸ்ஐக்கள் சிதம்பரதாணு மற்றும் லைசாள் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, 60க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்றதுடன், இதில் 6 பேருக்கு மட்டும் பணத்தை திருப்பி செலுத்தியதாக தெரிய வந்துள்ளது. சகாயசுபின் அளித்த புகாரின் பேரில், கின்சி மற்று–்ம் ஜான் ஸ்டாலின் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கணேசன் கூறியதாவது: பொதுவாக தென்மாவட்டங்களில்தான் அதிகளவு வெளிநாட்டு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாறுகின்றனர். அதிலும் படித்தவர்கள் அதிகம் மிகுந்த மாவட்டமான குமரியில்தான், வெளிநாட்டு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. எனவே பணம் கொடுக்கும் முன்பு, நமது வெளிநாட்டு தூதரகம் மூலம் வேலைக்கு செல்லும் நிறுவனம் இருப்பது உண்மையா? சம்பளம், பணி ஆணை உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து உண்மைதான் என்பதனை உறுதி செய்ய வேண்டும். சுற்றுலா விசாவை வாங்கிக் கொண்டு, பணிக்கு செல்ல முடியாது. மேலும் குமரியில் அங்கீகாரம்பெற்ற முகவர்கள் ஒருவர் கூட இல்லை. இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போதும் தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர்.  எனவே போலி நபர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என்றார்.

Tags : Malaysia ,
× RELATED பணம் பறித்த வாலிபர் கைது