×

பணத்தகராறில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

வேலூர், செப். 20: கே.வி.குப்பம் அருகே பணத்தகராறில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சடலத்துடன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா கே.வி.குப்பம் அருகே முடினாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம்(24). இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான பிரபு(31) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்தியானந்தம், பிரபுவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பிரபு, நித்தியானந்தத்தை தாக்கினாராம். இதுகுறித்து நித்தியானந்தம் கே.வி.குப்பம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். ஆனால், போலீசார் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், மனமுடைந்த நித்தியானந்தம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் போலீசாரை கண்டித்து நேற்று காலை 10 மணியளவில் விரிஞ்சிபுரம்-வடுகன்தாங்கல் செல்லும் சாலை முடினாம்பட்டு பகுதியில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.வி.குப்பம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால், அப்பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : suicide ,
× RELATED ராமநாதபுரம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை