வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு

வேலூர், செப்.20: வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை அதிகமாக உயர்த்தியது. இதை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும். டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு போன்றவற்றால் லாரி தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் லாரிகள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் 4.50 லட்சம் லாரிகள் நேற்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. வேலூர் மாவட்டத்திலும் 3 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பக்கத்து மாநிலங்களுக்கு சென்று பொருட்களை ஏற்றி வருகின்றன. பக்கத்து மாநிலங்களிலிருந்து வேலூர் மார்க்கெட்டுக்கு வெளிமாநில லாரிகள் மூலம் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன. தற்போது 50 சதவீதம் லாரிகள் வெளியூர்களுக்கு சென்றுவிட்டன. வேலூர் மாவட்டத்தில் நடந்த வேலை நிறுத்தத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றுள்ளன. அதிகாலையிலேயே மார்க்கெட்டிற்கு வெளியூர்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வந்த லாரிகள் இறக்கிவிட்டு திரும்பி சென்றன. இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: