×

அரக்கோணம் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை 5 குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

அரக்கோணம், செப். 20: அரக்கோணம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் 5 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும், வீடு, பள்ளிகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் சாரலுடன் தொடங்கிய மழை படிப்படியாக அதிகரித்து மாவட்டம் முழுவதும் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது. கே.வி.குப்பம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், காட்பாடியில் அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. பின்னர் படிப்படியாக மழை குறைந்தது. மழைக்காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. இந்நிலையில் அரக்கோணம், எஸ்ஆர் கேட், கிருஷ்ணாம்பேட்டை, கிரிப்பில்ஸ்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும், அரக்கோணம் எஸ்ஆர் கேட் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆதிதிராவிடர் தொடக்க பள்ளி, காந்திநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில் மழைநீர் தேங்கியது. இதனால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில், பள்ளிகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக்கோரி எஸ்ஆர் கேட் பகுதியில் ேநற்று காலை பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கால்வாய் ஆக்கிரமிப்பு, அடைப்பு ஆகியவற்றை சரிசெய்யக்கோரி கோஷம் எழுப்பினர். தகவலறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் மழைநீர் வகுப்பறைக்குள் புகுந்ததால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

இதற்கிடையே, அரக்கோணம் அடுத்த சித்தூர் கிராமத்தில் உள்ள இருளர் காலனியில் ேநற்று பெய்த மழையால் அங்குள்ள 19 குடிசை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பெருமூச்சு கிராமத்தில் மழையால் ஒரு குடிசை வீடும், அம்பேத்கர் நகரில் 3 வீடுகள் மற்றும் அணைக்கட்டான் புத்தூரில் 1 குடிசை வீடும் மழையால் இடிந்து விழுந்தது. இந்நிலையில், மழை பாதிப்பு பகுதிகளை எம்எல்ஏ சு.ரவி, தாசில்தார் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் முருகேன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ கூறினார்.

Tags : cottage houses ,Arakkonam ,
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...