வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் 50 ஏக்கரில் சாகுபடி செய்த சுரைக்காய்கள் அழுகியது

கும்பகோணம், செப். 20: கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கியதால் 50 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சுரைக்காய்கள் அழுகியது.சுரைக்காயின் தாயகம் ஆப்பிரிக்கா நாடாகும். உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. தொடக்கத்தில் இது உணவுக்காக பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாக பயன்பட்டன. தற்போது சுரைக்காய் உலகம் முழுவதும் உணவாக பயன்படுகிறது. சுரைக்காய் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும். இதனால் கோடைகாலத்தில் சுரைக்காயை அதிகளவில் மக்கள் வாங்கி பயன்படுத்துவது வழக்கம். நல்ல வடிகால் வசதியுள்ள அனைத்துவகை மண்ணிலும் சுரைக்காயை சாகுபடி செய்யலாம். சுரைக்காய்களில் பல்வேறு ரகங்கள் உள்ளன.இதனை பயிரிடுவதற்கு நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழுது கடைசி உழவின்போது எக்டேருக்கு 20 முதல் 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும்.பின்னர் 2.5 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள வாய்க்கால் தயார் செய்ய வேண்டும். அதில் 2.5 மீட்டர் இடைவெளியில் 50 கிராம் கலப்பு உரமிட்டு மேல் மண்ணுடன் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். ஒரு எக்டேருக்கு 3 முதல் 4 கிலோ விதையை விதைக்கலாம். சுரைக்காய்க்கு வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். கொடிகள் நிலத்தில் படருவதால் மழைக்காலங்களில் பாதிப்பு இல்லாமல் இருக்க சின்ன குச்சிகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி நிலத்தில் படாமல் பாதுகாக்கலாம்.

சுரைக்காய் முற்றுவதற்கு முன்பாகவே அறுவடை செய்துவிட வேண்டும். விதை ஊன்றி 70 நாள்களில் முதல் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 20 முதல் 35 டன் வரை அறுவடை செய்யலாம்தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை, பட்டீஸ்வரம், தேனாம்படுகை, சுந்தரபெருமாள்கோவில், திருவலஞ்சுழி உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் 50 ஏக்கருக்கு மேல் சுரைக்காய் சாகுபடி செய்திருந்தனர். விவசாயிகள் கொடிகளில் படரவிடாமல் தரையில் படர விட்டு வளர்த்திருந்தனர். தற்போது கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து இரவில் பலத்த மழை பெய்து வருவதால் சுரைக்காய் சாகுபடி செய்துள்ள வயலில் மழைநீர் தேங்கியது. பல நாட்களாக சுரைக்காய் சாகுபடி வயலில் மழைநீர் தேங்கியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஏக்கர் அளவிலான சுரைக்காய்கள் அழுகி நாசமாகிவிட்டன. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செய்த செலவுகள் அனைத்தும் வீணாகிவிட்டது என்று சுரைக்காய் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: