×

2,280 கடைகள், தொழிற்சாலைகள் கணக்கெடுப்பு

புதுச்சேரி, செப். 20: உழவர்கரை நகராட்சி சார்பில் வர்த்தக உரிம செயலி (Trade licenses App) மூலம் கடைகள், தொழிற்சாலைகளை கணிக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. முதல் நாளில் 2,280 கடைகளில் மாணவ, மாணவிகள் கணக்கெடுப்பு நடத்தினர். புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973 பிரிவு 355ன் படி உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தகம் செய்பவர்கள் நகராட்சியின் வர்த்தக உரிமம் அவசியம் பெற்றிருக்க வேண்டும். இதுவரை கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலமாகவும், நேரடியாகவும் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் அக்.2ம் தேதி ஆன்லைன் மூலம் உரிமத்துக்கு விண்ணப்பித்து பெறுவது, உரிமத்தை புதுப்பிப்பது, உரிமத்துக்கான கட்டணம் செலுத்தும் போன்ற சேவை துவங்கப்படவுள்ளது.இதன் முதற்கட்டமாக, உழவர்கரை நகராட்சியானது கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களை கொண்டு நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து கடை மற்றும் தொழிற்சாலைகளை 2 நாட்கள் கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 120 மாணவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த மாணவர்கள் நேற்று உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகளில் கணக்கெடுப்பு நடத்தினர். ஒரு குழுவுக்கு 10 பேர் வீதம் 12 குழுவாக பிரிந்து செயல்பட்டனர்.

அப்போது, கடை உரிமம்,  சொத்த வரி செலுத்தியதற்கான விவரம் உள்ளிட்ட தகவல்களை பெற்று வர்த்தக உரிம செயலியில் பதிவேற்றம் செய்தனர். மேலும், வாடகை கடை என்றால் கடை உரிமையாளர் குறித்த விவரங்களையும், கடை மூடியிருந்தால் அதனை புகைப்படம் எடுத்தும் பதிவேற்றம் செய்தனர். ஒவ்வொரு மாணவ குழுவினருக்கு உதவியாக ஒரு நகராட்சி ஊழியர் பணி அமர்த்தப்பட்டிருந்தனர்.முதல் நாளான நேற்று பிள்ளைச்சாவடி - 134, நாவற்குளம் - 27, குறிஞ்சி நகர் - 129, கதிர்காமம் - 96, இந்திரா நகர் - 80, ரெயின்போ நகர் - 272, காமராஜர் நகர் - 207, தர்மாபுரி - 136, வினோபா நகர் - 111, எல்லப்பிள்ளைச்சாவடி - 149, நடேசன் நகர் - 131, ரெட்டியார்பாளையம் - 253, முத்திரையர்பாளையம் - 147, மீனாட்சிபேட் - 55, கவுண்டன்பாளையம் - 98, அசோக் நகர் - 90, பாக்குமுடையான்பட்டு - 67, பெத்துசெட்டிப்பேட்டை - 77, திலாஸ்பேட்டை - 21 என மொத்தம் 2,280 கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி செயலியில் பதிவேற்றம் செய்துள்ளதாக உழவர்கரை நகராட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இன்றும் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.

Tags : shops ,factories ,
× RELATED அறந்தாங்கியில் நகை, பாத்திர கடைகளில் பயங்கர தீ