×

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

புவனகிரி, செப். 20:  கீரப்பாளையத்தில், மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து செல்லும் மின்சாரம் குறைவான மின் அழுத்தமாக இருப்பதால் பல கிராமங்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாது லேசாக காற்று அடித்தாலும் மழை பெய்தாலும் அன்று முழுவதும் மின்சாரம் இருக்காது. இதுகுறித்து புகார் தெரிவிக்க சென்றாலும் கீரப்பாளையம் மின்சார வாரிய பொறியாளர் பணியிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே காலியாக இருக்கிறது.  இதனால் இப்பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மின்சார வாரிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கடந்த பல மாதங்களாகவே எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர்.

இந்நிலையில், கீரப்பாளையத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  கீரப்பாளையம் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது கீரப்பாளையம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக பொறியாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் செம்மலர், செல்லையா, நெடுஞ்சேரலாதன், சுப்பிரமணியன், சதீஷ், அன்பழகன், உத்திராபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ...