×

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்

மயிலாடுதுறை, செப்.20: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மொழையூர் பகுதியில் ரவி என்பவர் கள்ளச்சாராயம் வியாபாராம் செய்து வருகிறார். புதுச்சேரி பாக்கெட் சாராயத்தை மொழையூர் சாலையில் விற்று வருவதால் மொழையூர், உளுத்தக்குப்பை, சோழசக்கரநல்லூர் பகுதி மதுபிரியர்கள் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடிக்க ஆரம்பித்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிற்கு பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த நேரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் பகுதியில் நேற்று காலை தகராறு நடந்துள்ளது. இதைக்கண்ட உளுத்தக்குப்பையை சேர்ந்த அருள்தாஸ் மகன் சார்லி(27), சாமிதுரை மகன் முத்து(27) என்பவர் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரவி மற்றும் அவரது மகன், மனைவி ஆகியோர் உருட்டுக் கட்டையால் சார்லியை சரமாரியாக தாக்கியதில் மண்டை உடைந்து மயங்கி விழுந்தார். மேலும் முத்துவிற்கும் கையில் பலத்த அடி விழுந்தது. இதைக் கேள்விப்பட்ட உளுத்தக்குப்பை பகுதி பொதுமக்கள் ரவி மற்றும் முத்துவை கொண்டுவந்து மயிலாடுதுறை சீர்காழி சாலை சோழசக்கரநல்லூர் பகுதியில் உட்காரவைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரத்தம் ஒழுக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.இத்தகவல் கேள்விப்பட்ட மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் உடனே சார்லியையும் முத்துவையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கே அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அவர் அளித்த புகாரின்பேரில் ரவிமீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர். இப்பிரச்னையால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது.


Tags : Attack ,Mayiladuthurai ,
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு