×

சித்தேரியை தூர்வார வேண்டும்

நெய்வேலி, செப். 20: குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தில் உள்ளது சித்தேரி. இந்த ஏரி 17 ஏக்கர் சுற்றளவு கொண்டது. அயன் குறிஞ்சிப்பாடி, வரதராஜன்பேட்டை, குருவப்பன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களின் வாழ்வாதாரமாக இந்த சித்தேரி இருந்து வந்தது. தற்போது இந்த ஏரியில் ஆகாயதாமரை, முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளதால் ஏரியின் தண்ணீரை கிராமமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த சித்தேரி நீரை கடந்த பத்து வருடங்களுக்கு முன், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். அதுமட்டுமின்றி கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், இளைஞர்கள் உள்பட பலர் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தற்போது ஆகாய தாமரை மலரால் சுமார் ஆறு அடி ஆழமாக இருந்த ஏரியின் ஆழம் தற்போது இரண்டு அடியாக இருப்பதால் பாசனத்திற்கான நீர் ஆதாரங்கள் தற்போது குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.மேலும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் முதலாவது வார்டில் சித்தேரி அமைந்திருந்தாலும், இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் யார் இந்த ஏரியை தூர்வாருவது என்று குழப்பத்தில் அதிகாரிகள் உள்ளதால், இந்த ஏரி நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருக்கிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஏரியை தூர்வார மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கள்ளக்குறிச்சி சித்தேரியில் தேங்கி கிடந்த கழிவுநீர் அகற்றம்