×

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

நீடாமங்கலம்,செப்.19: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் விழா நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. அவர் கூறுகையில் இன்றைய காலகட்டத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பூமி வெப்பமயமாதலின் பொருட்டு பல்வேறு நாடுகள் அதிக அளவில் மரம் நடுதலை ஊக்குவிப்பதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக பட்டியலிட்டு கூறினார். தஞ்சை மாவட்ட வன அலுவலர் குமாரசாமி தேக்குமர சாகுபடி குறித்த கையேட்டை வெளியிட்டு பேசுகையில், சாகுபடி செய்யும் பெரும்பாலான பயிர்கள் காட்டுத் தாவரங்களிலிருந்து உருவாக்கப்பட்டது.

காடுகளின் முக்கியத்துவத்தை உணரலாம்,வேளாண்மைக்கு அடிப்படையே காடுகள் தான் என்பதனை மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் உணர்ந்து மரம் நட்டு வளர்த்து பராமரிக்க வேண்டும் என்றார். திருவாரூர் மாவட்ட விரிவாக்க வன அலுவலர் ராதாகிருஷ்ணன் திருவாரூர் மாவட்டத்திற்கேற்ற மர வகைகள் குறித்து பேசினார், தஞ்சை மாவட்ட வனவர் இளஞ்செழியன் நாட்டின் வளர்ச்சியானது காடுகளின் பரப்பளவை பொறுத்தே அமைவதை தெரிவித்து மரம் வளர்த்தல் முறை குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார்.நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் தேவேந்திரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன், தஞ்சை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கலந்து கொண்டனர். நிலைய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மண்ணியல்துறை உதவி பேராசிரியர் அனுராதா நன்றி கூறினார்.

Tags : Environmental Awareness Camp ,Needamangalam Agricultural Science Center ,
× RELATED சம்பா, தாளடி பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள்