×

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிண்டாலுக்கு ரூ.5,689க்கு பருத்தி ஏலம்

திருவாரூர், செப். 19: திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரத்து 689 விலை கிடைத்தது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து நீரானது உரிய முறையில் கிடைத்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் விவசாயிகள் 3 போக நெல் சாகுபடி மேற்கொண்டு வந்தனர். அதன்பின்னர் மேட்டூர் அணையிலிருந்து உரிய நீர் கிடைக்காது மற்றும் பருவமழை பொய்த்துப் போவது போன்ற காரணங்களினால் 3 போகம் என்பது 2 போகமாக மாறி அதன் பின்னர் தற்போது அதுவும் ஒருபோக சாகுபடியாக இருந்து வருகிறது.இந்நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறினர்.

அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடியையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் பருத்தி பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அறுவடை செய்யப்படும் பருத்தி பஞ்சுகள் அனைத்தும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வியாபாரிகளை கொண்டு ஏல முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டில் இதற்கான கொள்முதல் ஏலம் என்பது கடந்த ஜுன் மாதம் 11ம் தேதி துவங்கிய நிலையில் 15வது வாரமாக திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் துவங்கிய ஏலமானது நேற்று மாலை வரையில் நடைபெற்றது.இதில் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 854 குவிண்டால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரத்து 689ம், குறைந்த பட்சமாக ரூ 4 ஆயிரத்து 509 மற்றும் சராசரியாக ரூ 5 ஆயிரத்து 71ம் விலை கிடைத்ததாக விற்பனை கூடத்தின் செயலாளர் வித்யா தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvarur Regulatory Sales Center ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு