அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ்ஸ்டாண்டில் அடிப்படை வசதி இல்லை பயணிகள் கடும் அவதி

அருப்புக்கோட்டை, செப். 19: அருப்புக்கோட்டை புதிய நகராட்சி பஸ் ஸ்டாம்டில் அடிப்படை வசதி இல்லாமல் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.அருப்புக்கோட்டை-மதுரை ரோட்டில் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது.  இங்கிருந்து  வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. வெளியூர்கள் செல்வதற்காக  தினந்தோறும் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து  செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பொதுமக்கள் உட்காரும் இருக்கைகள் அனைத்தும் பல வருடங்களாக சேதமடைந்து உள்ளது. இதனால் வெளியூர் செல்ல வரும் பொதுமக்கள் தரையில்தான் உட்கார்ந்து உள்ளனர். பஸ் ஸ்டாண்டின் மேற்கூரை பெயர்ந்து அவ்வப்போது கீழே விழுகிறது.இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன்தான் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். இலவச கழிப்பறைகள் கட்டியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பூட்டியே வைத்துள்ளனர்.  கட்டண கழிப்பறை இருந்தும் தண்ணீர் வசதி இல்லாமல் பூட்டிக் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவசரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ் ஸ்டாண்டின் இருபுறமும் கடைக்காரர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர்.வெளியூரிலிருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லும் வழியில் போதிய விளக்கு வசதி இல்லாமல் இருள் மூழ்கி கிடக்கிறது. மேலும் பஸ் ஸ்டாண்டின் முன்புறம் உள்ள ஹைமாஸ் விளக்கு பழுதடைந்து விட்டது. இதனால் பஸ் ஸ்டாண்டின் முன்புறம் இருட்டாகவே உள்ளது.

பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பஸ் ஸ்டாண்ட் முழுவதும் போதிய மின்விளக்கு வசதி இல்லாமல் இருள் மூழ்கி கிடக்கிறது. இதனால் வெளியூர் செல்லும் வயதானவர்கள் பஸ் வந்து செல்வது தெரியாமல் அவதிப்படுகின்றனர்.
பழைய, புதிய பஸ் நிலையத்தை பராமரிப்பதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.  பழைய பஸ் நிலையத்தில் சைக்கிள் ஸ்டாண்ட், பயணிகள் நிழற்குடை, பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி முடிவடைந்து உள்ளது.
ஆனால் புதிய பஸ் நிலையத்தில் பல வருடங்களாக பயணிகளின் இருக்கை, மேற்கூரை சேதமடைந்ததை பராமரிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. ஆனால் சைக்கிள் ஸ்டாண்ட் கட்டும் பணியை மட்டும் துரிதப்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்னைகளான இருக்கை வசதி, கழிப்பறை வசதி, மின்விளக்குகள் வசதி, செய்து தர நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே புதிய பஸ்நிலையத்தில் பணிகளை துரிதப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி...