×

திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா

திருவில்லிபுத்தூர், செப். 19: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் உள்ள குன்றின் மீது சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள். இந்தாண்டு புரட்டாசி முதல் சனி வார விழா வரும் 21ம் தேதி துவங்குகிறது.
விசேஷ தினத்தன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.இந்நிலையில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து பணிகளும் திருவண்ணாமலை பெருமாள் கோயிலில் ஜரூராக நடந்து வருகிறது.

விசேஷ தினத்தன்று கோயிலில் நெரிசலை தவிர்க்கும் வகையில், மலைப்படிகளில் ஏறுவதற்கு ஒரு பாதையும், இறங்குவதற்கு ஒரு பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் வெயில் மற்றும் மழையால் சிரமமடையாமல் இருப்பதற்காக தகர பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தடுப்புகள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடக்கிறது. புரட்டாசி சனி வார விழாவை முன்னிட்டு ஏற்கனவே கோயில் முழுவதும் வர்ணம்  தீட்டும் தீட்டு பணி முழுவீச்சில் நடந்தது.இதற்கான அனைத்து  ஏற்பாடுகளையும் தக்கார் ரவிச்சந்திரன், அறநிலைய துறை ஆணையர் தனபால்,  நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்து வருகின்றனர். இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் கூறுகையில், ‘‘கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதியும், கூட்ட நெரிசலை தவிர்க்க தனித்தனி பாதைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.

Tags : Pratasi Ceremony ,Thiruvannamalai Srinivasa Perumal Temple ,Tiruviliputhur ,
× RELATED திருவில்லிபுத்தூர் திருவண்ணாமலை...