×

சிவகாசி பட்டாசு கடைகளில் கிப்ட்பாக்ஸ் விற்பனை மந்தம்

சிவகாசி, செப். 19: நகை விலை உயர்வால் சிவகாசி பட்டாசு கடைகளில் கிப்ட் பாக்ஸ் விற்பனை கடந்த ஆண்டை விட பாதியாக குறைந்துள்ளது. இதனால் பட்டாசு விற்பனையாளர்கள்  கவலையடைந்துள்ளனர்.
சிவகாசி பகுதியில் பட்டாசு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 5 லட்சம் தொழிலார்கள் வரை பணி புரிகின்றனர். சிவகாசியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 200க்கும் குறைவாகவே பட்டாசு ஆலைகள் இயங்கி வந்தன.  தீப்பெட்டி தொழிலும் சிவகாசியில் நடைபெற்று வந்தது. பட்டாசு ஆலைகள் கட்ட அதிக பணம் தேவை என்பதால் பலர் புதிய ஆலைகளை கட்ட முன்வரவில்லை. ஆனால சிறு தொழில் தீப்பெட்டி ஆலை துவங்க குறைவான முதலீடே தேவை என்பதால் அதிகமானர்வகள் தீப்பெட்டி ஆலைகளை நடத்தி வந்தனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தீப்பெட்டி ஆலைகளை இல்லாத கிராமமே இல்லை என்ற நிலை இருந்தது. நாளடைவில் இத்தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக போதிய லாபம் கிடைக்காததால் சிறு தீப்பெட்டி உற்பத்தி ஆலைகளை நலிவடைந்தது. காலப்போக்கில் சிறு தீப்பெட்டி உற்பத்தி தொழில் முற்றிலும் அழிந்து தற்போது விரல் விட்டு எண்ணகூடிய அளவில் ஒரு சில  பெரிய ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்நிலையில் பட்டாசு தொழில் தற்போது வளர்ச்சி அடைந்திருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு பிரச்னை உருவாகி பட்டாசு உற்பத்தி தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சிவகாசி சுற்று வட்டார கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி பகுதியில் 75 கடைகள் மட்டுமே இருந்தன. தற்போது சிவகாசி-சாத்தூர் ரோட்டில் 380 கடைகள், சிவகாசி-விருதுநகர் ரோட்டில் 158 கடைகள், சிவகாசி-சங்கரன் கோவில் ரோட்டில் 60 கடைகள், சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் 20 கடைகள் என பட்டாசு கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.இது தவிர சாத்தூர்-திருநெல்வேலி நான்கு வழிச்சாலை, விருதுநகர்-மதுரை நான்கு வழிச்சாலைகளிலும் பட்டாசு கடைகள் உள்ளன. சிவகாசியில் பட்டாசுகள் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் இருந்து சிவகாசிக்கு ஏராளமானோர்  வந்து செல்கின்றனர். குறிப்பாக சென்னை நகரில் இருந்து சந்தா பிடிப்பவர்கள் ஏராளமானோர் கிப்ட் பாக்ஸ் ஆர்டர்கள் கொடுப்பது வழக்கம்.

இவர்கள் பட்டாசு, நகை, ஸ்வீட், பாத்திரம் போன்ற பொருட்களை சந்தா செலுத்துபவர்களுக்கு தீபாவளி பண்டிகையின்போது வழங்குகின்றனர். இந்த ஆண்டு நகை விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் பட்டாசு கொடுப்பதை தவிர்த்து வருகின்றனா். இதனால் சென்னையில் இருந்து கிப்ட்பாக்ஸ் ஆர்டர்கள் போதிய அளவில் வரவில்லை. சிவகாசி பட்டாசு கடை உரிமையாளர்கள் பெரும்பாலானோர் இந்த ஆர்டரை நம்பித்தான் உள்ளனர். கிப்ட் பாக்ஸ் ஆர்டர்கள் குறைந்து விட்டதால் வியாபாரிகள் கலவையடைந்துள்ளனர். சிவகாசி பகுதி பட்டாசு கடைகளில் விற்பனை குறைந்துள்ளதால் பட்டாசு விற்பனை களை இழந்து காணபடுகிறது.  பட்டாசுகடை உரிமையாளர் கணேசன் கூறுகையில், ‘சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிபெருக்கு அன்று பட்டாசு விற்பனை துவக்குவது வழக்கம். முதல் மூன்று மாதங்கள் கிப்ட் பாக்ஸ் ஆர்டர்களை புக் செய்யப்படும். இதன் பின்னர் தீபாவளி பண்டிகை விற்பனை தொடங்கும். பட்டாசு கடை வியாபாரத்தில் 70 சதவீதம் கிப்ட் பாக்ஸ் ஆர்டர்களை நம்பித்தான் வியாபாரிகள் உள்ளனர். சென்னையில் இருந்துதான் அதிகளவில் கிப்ட பாக்ஸ் ஆர்டர்கள் பெறப்படும். இந்த ஆண்டு நகை விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் சென்னையில் இருந்து கிப்ட் பாக்ஸ் ஆர்டர்கள் சரிவர வரவில்லை. பட்டாசு விற்பனை குறைந்துள்ளதால் அதிகளவில் இருப்பு வைத்துள்ள பட்டாசு விற்பனையாளர்கள் கவலலையடைந்துள்ளனர்’ என்றார்.

Tags : sales slowdown ,Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து