×

பெரியாரில் கடும் நெரிசல் ஏற்படுகிறது தமுக்கம் பஸ் ஸ்டாண்டாக மாற்றப்படுமா? தற்காலிகமாக அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

மதுரை, செப்.19: பெரியார் பஸ் ஸ்டாண்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் தமுக்கம் மைதானத்தை தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்ற மாநகராட்சி முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாநகராட்சிகள் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்பட்டன.  மதுரை மாநகராட்சி சார்பில் பெரியார், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டுகளை ஒருங்கிணைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.159 கோடியில் நவீனப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. இதற்காக பஸ் ஸ்டாண்டிற்குள் இருந்த 446 கடைகள் அகற்றப்பட்டன. தற்போது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, அதில் கான்கிரீட் போடுவதற்காக கம்பிகள் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.  பஸ் ஸ்டாண்டுகளை மூடுவதற்கு முன்பே பஸ்களை நிறுத்துவதற்கு ஏதுவான இடத்தை மாநகராட்சி தேர்வு செய்யவில்லை. அதற்குப்பதிலாக பஸ் ஸ்டாண்டிற்கு வெளியிலேயே பஸ்களை நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் எந்த நேரமும் பெரியார் பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் தினமும் நெரிசலில் சிக்கித்தவித்து வருகின்றனர்.

இதனை தவிர்க்க தமுக்கம் மைதானத்தை பெரியார் பஸ்ஸ்டாண்டாக தற்காலிகமாக மாற்றலாம் என கோரிக்கை எழுந்துள்ளது. ஏனெனில் இதன் பின்பக்கம் பெரிய இடம் காலியாக இருக்கிறது. இந்த இடத்தில் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டு, புறப்பட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யலாம். ஆனால் மாநகராட்சி தமுக்கத்தை விட்டுக்கொடுக்க மனமில்லை. தமுக்கம் மைதானம் தான் மாநகராட்சி வருமானத்தை அள்ளித்தருகிறது. இதனால் பஸ்ஸ்டாண்டிற்கு தமுக்கம் மைதானத்தை மாநகராட்சி தர மறுத்துவிட்டது. மக்கள் படும் துயரத்தை பற்றி மாநகராட்சி கண்டு கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மக்கள் கூறுகையில், ‘‘பெரியார் பஸ் ஸ்டாண்ட் நவீனமாகும் பணிகள் முடிய இன்னும் ஓராண்டுக்கும் மேலாகும். அதுவரை பொதுமக்கள் சிரமப்பட வேண்டியது தான். பெரியார் பஸ்ஸ்டாண்டை சுற்றிலும் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் என அனைவரும் அல்லல்பட்டு கொண்டிருக்கின்றனர். எனவே தமுக்கத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Periyar ,
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு