ஊரணிகளை தூர்வார தனியாருடன் மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

மதுரை, செப்.19: மதுரையில் 8 ஊரணிகளை புனரமைப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி தமுக்கம் கலையரங்கத்தில் நடைபெற்ற மதுரை கூடலரங்கம் நிகழ்ச்சியில் ஹைடெக் அராய் நிறுவனம் மற்றும் தானம் அறக்கட்டளை ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சிக்குட்பட்ட 8 ஊரணிகளை புனரமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கமிஷனர் விசாகன்  தலைமையில் நடந்தது.  ஒப்பந்தத்திற்கு பின்னர் கமிஷனர் விசாகன் பேசுகையில், தமிழக அரசு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், வளர்ச்சித்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆணுக்கு நிகராக பெண்கள் திறமையாக வேலை செய்கின்றனர். மதுரை மாநகராட்சியில் 100 வார்டு கவுன்சிலர் தேர்தலில் 50 பேர் பெண்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 34 ஊரணிகளில் முதற்கட்டமாக கோசாகுளம் ஊரணி தூர்வாரப்பட்டு சுற்றி மரக்கன்றுகளும், மழைநீரை சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 33 ஊரணிகள் தொடர்ந்து தூர்வாரப்பட உள்ளது. முதற்கட்டமாக 8 ஊரணிகளை தானம் அறக்கட்டளை மற்றும் ஹைடெக் அராய் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்றார். கூடுதல் ஆட்சியர் அம்ரித், நிறுவன மேலாண்மை இயக்குநர் பங்கேரா, அறக்கட்டளை நிர்வாகி வாசுமலை, ஒருங்கிணைப்பாளர் குருநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: