தனியாருக்கு தாரை வார்க்க கூடாது ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, செப்.19: ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என வலியுறுத்தி, மதுரையில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ரயில்வே துறையை தனியாருக்கு தாரை  வார்க்கக்கூடாது. பாதுகாப்பு பிரிவுகளில் முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த  தொழிலாளர்களாக நியமனம் செய்யக்கூடாது. ஐசிஎப் மற்றும் ஆர்சிஎப் பணிமனைகளை  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து  செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மறுநியமனம் செய்யக்கூடாது.  படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். 30 ஆண்டு சர்வீஸ் மற்றும் 55  வயது நிரம்பிய ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டத்தை கைவிட  வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தக்ஷின் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயூ) மற்றும் சிஐடியு சார்பில் மதுரை மேற்கு நுழைவு வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை பொதுக்கிளை செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். கோட்டத்தலைவர் பவுலின் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன், டிஆர்இயூ துணை பொதுச்செயலாளர்கள் திருமலை அய்யப்பன், நெடுமாறன், கோட்டச்செயலாளர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோட்ட பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.

Related Stories: