ஒரு மாதமாக குடிநீர் இல்லை கலையம்புத்தூர் மக்கள் போராட்ட அறிவிப்பால் பரபரப்பு

பழநி, செப். 19: பழநி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் 1 மாதத்திற்கு மேலாக குடிநீர் கிடைக்கவில்லையென கூறி கிராமமக்கள் போராட்ட அறிவிப்பு செய்துள்ளனர். பழநி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு இப்பகுதியில் உள்ள அணைகள் மற்றும் குளங்கள் நீராதரமாக உள்ளன. இதன்படி பழநி அருகே பாப்பம்பட்டி, குப்பம்பாளையம், அ.கலையம்புத்தூர் கிராமங்களுககு முறையே குதிரையாறு மற்றும் பொருந்தலாறு அணைகளில் இருந்து நீர் பெறப்படுகிறது. இப்பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைகளில் இருந்து குடிநீருக்காக நீர் திறப்பு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த 1 மாத காலமாக இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்கவில்லை. போர்வெல்களும் சரிவர இயங்காததால் தண்ணீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் அலைந்து திரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை ஏதுமில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் வரும் செப்.21ம் தேதி (சனி) கொழுமம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்ட அறிவிப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: