போலீசாரின் கெடுபிடி வசூலை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஹெல்மெட் அணிந்து போராட்டம்

திண்டுக்கல், செப். 19: போக்குவரத்து போலீசாரின் கெடுபிடி வசூலை கண்டித்து திண்டுக்கல்லில் இந்திய ஜனாநயக சங்கத்தினர் ஹெல்மெட் அணிந்து நூதன போராட்டம் நடத்தினர்.திண்டுக்கல்- பழநி சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று ஹெல்மெட் அணிந்த நிலையில் நூதன போராட்டம் நடத்தினர்.மாவட்ட தலைவர் விஷ்ணுவர்தன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் தலைக்கவசம் அணிந்து செல்பவர்களிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் என்ற பெயரில் தொடர்ந்து வசூலித்து வருகிறது. மேலும் வாகனத்தின் சாவியை எடுத்து கொள்வது, ஒருமையில் பேசுவது, விரட்டி விரட்டி பிடிப்பது போன்றவற்றின் மூலம் கெடுபிடி வசூல் செய்து வருகிறது. போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டு விட்டு அபராதம் வசூலிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர். இதில் துணை தலைவர் சிலம்பரசன், நகர தலைவர் கார்த்திக்குமார், ஒன்றிய தலைவர் நிருபன்பாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: