×

மாநகராட்சியில் அவலம் பாதுகாப்பற்ற துப்புரவு தொழிலாளர்கள்

திருப்பூர், செப்.19:  திருப்பூர் மாநகராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் வேலை பார்க்கும் தனியார் துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்காததால்  அவதிக்குள்ளாகி உள்ளனர். இவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  திருப்பூர் மாநகராட்சி இரு மண்டலங்களில் உள்ள வார்டுகளில் குப்பைகளை சேகரிக்க தனியாருக்கு விடப்பட்டுள்ளது. பொது மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களின் கழிவு, பின்னலாடை நிறுவனங்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் என தினமும் 570 டன் கழிவுகள் வெளியேறுகிறது.   மாநகராட்சி சார்பில் தென்னம்பாளையம் மொத்த காய்கறி சந்தை வளாகத்தில் குப்பை தரம் பிரிக்கும் பணிகளில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்க தேவையான செட் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. பிளாஸ்டிக் பேப்பர்களை தரம் பிரித்து இயந்தரங்கள் மூலம் பேல் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தைச் சார்ந்த 10க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இவர்கள் குப்பைகளை பிரிக்கும் போது கையுறை, கால்களுக்கு காலணி அணியாமல் வேலை பார்க்கின்றனர். குப்பைகளில் பல்வேறு விஷப்பூச்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், வெறும் கைகளில் குப்பைகளை எடுக்கும் போது கை விரல் நகங்களில் அழுக்கு படிந்து உடல் நலக்குறைவு ஏற்படுவதோடு விஷப்பூச்சிகள் கடிக்கும்  அபாயம் உள்ளது.  துப்புரவு தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை.  குப்பைகளை தரம் பிரிக்கும் தனியார் நிறுவன துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : cleaning workers ,corporation ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு