×

அமராவதி அணை நிரம்பும் நிலையில் 9 கண் ஷட்டர் வழியாக வழியும் தண்ணீர்

உடுமலை, செப். 19: அமராவதி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் 9 கண் ஷட்டர் வழியாக தண்ணீர் கசிய துவங்கி உள்ளது.  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைதான் அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையில் அமராவதி அணை நிரம்பி வழிந்தது. இதனால் 9 கண் ஷட்டர்கள் திறக்கப்பட்டு 25 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

 அதேபோல், இந்த ஆண்டு போதுமான மழை பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி துவங்கவில்லை. அவ்வப்போது மழை பெய்வதும், பின்னர் நின்றுவிடுவதுமாக கண்ணாமூச்சி காட்டியது. இதனால் சாகுபடி பணியை துவங்காமல் விவசாயிகள் காத்திருந்தனர். இருப்பினும், மிதமாக பெய்த மழை காரணமாக அமராவதி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து சீரான அளவில் இருந்தது. அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்தது.
 கடந்த சில தினங்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது. இதனால் தற்போது 9 கண் ஷட்டர் வழியே தண்ணீர் கசிய துவங்கி உள்ளது.

நீர்மட்டம் 88 அடியை தொட்டால் பாதுகாப்பு கருதி, 9 கண் ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்படும். நேற்று அணைக்கு 390 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், அதிகப்படியான மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே 9 கண் ஷட்டர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இழுபறியாக இருந்தாலும், அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Amaravati Dam ,
× RELATED அமராவதி அணை நீர் மட்டம் சரிவு