×

தேங்கி கிடக்கும் கழிவுநீரால் பாதிப்பு

திருப்பூர், செப்.19:  திருப்பூரில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில், பாதாளச் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்கிறது.
குறிப்பாக, பலவஞ்சிபாளையம், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், கோல்டன் நகர், புதிய பஸ் நிலையம், லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் ரோட்டில் குளம்போல் தேங்கி நிற்கிறது.   இதை மாநகராட்சி ஊழியர்கள் ஒரு வாரம் கழித்தே எடுத்து செல்கின்றனர். இதனால்,  கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் 60 வார்டுகளில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், பல வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மட்டுமே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால் கழிவுகளை அகற்றுவார்கள். தற்போது, அவர்களும் சரிவர அகற்றுவதில்லை.  இதனால், மாநகரில் பெரும்பாலான சாக்கடை கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவு குவிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி அடைப்பை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா