×

குறிச்சிபிரிவு மக்களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தும் வீடுகள் ஒதுக்கவில்லை என புகார்

கோவை, செப். 19:  கோவை குறிச்சி பிரிவு அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் இட்டேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் சார்பாக குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் அப்பகுதியில் வசித்து வரும் 35 குடும்பங்களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தும் வீடுகள் ஒதுக்கவில்லை என மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமியிடம் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை குறிச்சி பிரிவு அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் இட்டேரி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் எங்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித்தருவதாக கூறி கணக்கெடுத்துச்சென்றது. அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் உக்கடம் அருகில் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் அவ்வாறு ஒதுக்க பட்ட வீடுகளில் முறையான ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வைத்துள்ள சுமார் 35 குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை.

 இது குறித்து குடிசை மாற்று வாரிய அலுவலகம் சென்று விடுபட்ட வீடுகளை கணக்கெடுத்து அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கித்தருமாறு மனு கொடுத்தோம். இதுவரை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி நாங்கள் தற்போது குடியிருந்து வரும் வீடுகளை இடிக்கப்போவதாக அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். பல ஆண்டு காலமாக குடியிருந்து வரும் எங்களுக்கு முறையாக குடியிருப்புகளை ஒதுக்கி தராமல் எங்கள் வீடுகளை இடித்தால், குழந்தைகளின் கல்வி எங்கள் வாழ்வாதாரம் அனைத்தும் பாதிக்கப்படும். எனவே எங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்து தரும் வரை நாங்கள் தற்போது குடியிருந்துவரும் வீடுகளை இடிக்கவோ, அப்புறப்படுத்தவோ கூடாது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அரசு விழாக்களில் சமூக இடைவெளியை...