5-வது மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யவேண்டும்

கோவை, செப்.19: பள்ளி கல்வித்துறையின் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொது தேர்வு அறிவிப்பை கண்டித்தும், அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். இதில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., தமிழ்புலிகள், மே 17 இயக்கம், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்ணணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, சி.பி.ஐ.எம்.எல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று பொது தேர்வு அறிவிப்பை கண்டித்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறியதாவது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேர்வு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் இடைநிற்றல் அதிகரித்து, குழந்தைகளின் கல்வி பாழாகும் அபாயம் உள்ளது. குலக்கல்வியை மறைமுகமாக புகுத்துவதற்காக மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை தமிழக அரசு அப்படியே நிறைவேற்ற முயற்சிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு என தமிழக அரசு சொல்வது ஏமாற்று வேலை, ஏற்கனவே நீட் தேர்விற்கு ஓராண்டு விலக்கு என சொல்லி ஏமாற்றினார்கள். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் கல்வி பெறும் உரிமையை பறிக்கும் செயல். இவ்வாறு த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறினார்.

Related Stories: