×

முசிறி அருகே விவசாய நிலத்தில் புதையல் எடுக்க பொதுமக்கள் திரண்டதால் பரபரப்புஅதிகாரிகள் தடுத்ததால் சேவலை காவு கொடுத்து விட்டு திரும்பி சென்றனர்

முசிறி, செப்.19: முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியம் அழகாப்பட்டி கிராமத்தில் உள்ள வயலில் எட்டுப்பட்டிக்கு சொந்தமான கோயிலில் பயன்படுத்தும் கரகம், சொம்பு, சிலைகள் இருப்பதாகவும், அந்த புதையலை வெளியில் எடுப்பதற்கு பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ளது அழகாப்பட்டி கிராமம் இங்குள்ள ஏரிக்கரையின் அருகே அழகாப்பட்டியை சேர்ந்த பொன்னம்பலம் என்பருக்கு சொந்தமான வயலில் உள்ள மண்மேட்டில் வாதநாராயண மரத்தின்கீழே சுமார் 200 வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட எட்டுப்பட்டிக்கு சொந்தமான கோயிலில் பயன்படுத்தும் சொம்பு, கரகம், சாமிசிலைகள், புதையல் இருப்பதாகவும், புரட்டாசி மாதம் பிறந்து குறிப்பிட்ட தினங்களுக்குள் எடுத்தால்தான் வெளியே வருவதாகவும், பக்தர்களுக்கு நல்லாசியும், மழைவளத்தையும், விவசாயம் செழிக்கவும் செய்வேன் என பெருமாள் சுவாமி பக்தர் ஒருவரின் கனவில்வந்து சொன்னதாக தகவல் பரவியது. இந்நிலையில் அழகாப்பட்டி கிராமத்தை சேர்ந்த தனபால் என்பவர் பொன்னம்பலத்தின் வயலில் காளிஅம்மனும், மாரியம்மனும் விளையாடுவதாகவும், அங்குள்ள மண்முகட்டில் கரகம்பாலிக்கும் சொம்பு உள்ளதாகவும், அதனை வெளியே எடுத்து வழிபட வேண்டும் என சுவாமி அருள்வாக்கில் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து எட்டுப்பட்டியைசேர்ந்த பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பொக்லைன் இயந்திரத்துடன் பொன்னம்பலத்தின் வயலுக்கு வந்தனர்.

அங்கு இருந்த புற்றுக்கு பால்ஊற்றி பூஜைகள் நடந்தது. பின்னர் பூசணிக்காய் உடைக்ககப்பட்டு பொக்லைன் மூலம் புதையலை தோண்டி எடுக்கும் பணி துவங்கியது. இதனை திரண்டிருந்த பொதுமக்களும், பக்தர்களும் புதையல் கிடைக்கப்போகிறது என்ற ஆவலில் வைத்தகண் வாங்காமல் பார்த்தனர். நீண்டநேரம் தேடியும் புதையல் கிடைக்கவில்லை. இந்நிலையில் தகவலறிந்த முசிறி வருவாய்துறை அலுவலர்கள் போலீசாருடன் அங்கு வந்தனர். அங்கிருந்த முக்கியஸ்தர்களை அழைத்து வருவாய்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்காமல் உரிய அனுமதி பெறாமல் இவ்வாறு புதையலை தேடுவது சட்டப்படி குற்றமாகும். உரிய முறையில் கோட்டாட்சியரிடம் மனுஅளித்து அனுமதி பெற்று அலுவலர்கள் முன்னிலையில் தேடி பாருங்கள். கோயிலுக்கு உரிமைபட்ட பொருளாக இருந்து அதற்கான சான்று இருந்தால் உங்களிடம் அரசாங்கமே பொருட்களை ஒப்படைக்கும். இல்லெயெனில் அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும் என்று கூறினார். இதனால் புதையலை தேடும் பணி நிறுத்தப்பட்டது. அனுமதி பெற்று புதையலை வேறொரு நாளில் தேடலாம் என அங்கிருந்த முக்கியஸ்தர்கள் கூறியதையடுத்து சேவல் காவு கொடுக்கப்பட்டு பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே புதையல் எடுப்பதாக பரவிய தகவல் பரவியதால் அங்கு பொதுமக்கள் திரளாக கூடினர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Tags : public ,farm ,Musiri ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி