சிறையில் அடைக்கப்பட்ட வேளாண்மை அதிகாரி மீது மீண்டும் குவியும் புகார்கள்

காடையாம்பட்டி, செப்.19:   மோசடி புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் மீது மீண்டும் தீவட்டிப்பட்டி போலீசில் புகார்கள் குவிந்து வருகிறது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வெண்ணந்தூரைச் சேர்ந்தவர்  ராஜேந்திரன் மகன் கோபாலகிருண்ணன்(27). எம்எஸ்சி பட்டதாரி. இவரது நண்பர் மணிவண்ணன், சேலம் அரசு போக்குவரத்து துறையில் பனியாற்றி வருகிறார். இவர் மூலம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி வேளாண்மை துறை உதவி இயக்குனர் கோவிந்தராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து கோபாலகிருஷ்ணணிடம்  வேளாண்மை துறையில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக ₹13 லட்சம் கட்ட வேண்டும் எனவும் கூறி, கோவிந்தராஜ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணத்தை பெற்றுக்கொண்டார். ஆனால், வேலை வாங்கி தராததோடு, பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார்.இதையடுத்து, பணத்தை திருப்பி கேட்ட கோபாலகிருஷ்ணனை, கோவிந்தராஜ் கட்டையால் தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் கோவிந்தராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மேட்டூர் அரசு பணிமனையில் கண்டக்டராக பணியாற்றும் மாதையன் என்பவர் மூலம், காடையாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜிடம் கடந்த 2015ம் ஆண்டு திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் மாது, செல்வம் மகன் அருண்குமார் ஆகியோருக்கு, போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக் வேலை வாங்கி தருவதாக கூறி, ஒருவரிடம் 7 லட்சம் வீதம் 14 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வாங்கி தரவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதே போல், ரமேஷ் (35), விருதாசம்பட்டி சுதாகர் (37) ஆகியோருக்கும், டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி, தலா ₹2 லட்சம் வீதம் 4 லட்சம் என மொத்தம் 4 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து அவர்கள் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் முருகன், விசாரணை நடத்தி வருகிறார். பண மோசடி புகாரில், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காடையாம்பட்டி உதவி வேளாண்மை இயக்குனர் மீது, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: