ஓமலூர் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

ஓமலூர், ெசப்.19:  ஓமலூர் அருகே விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.  ஒமலூர் அருகே கருப்பூரில், புதியதாக 225 கிலோவாட் திறன் கொண்ட துணை மின்நிலையம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதியதாக அமைக்கப்படும் கருப்பூர் துணை மின் நிலையத்திற்கு, உயர் அழுத்த மின்சாரம் கொண்டுவர மேட்டூரில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் கே.ஆர்.தோப்பூர் பவர்கிரிட் மூலம் வருகிறது. இங்கிருந்து கருப்பூருக்கு மின்சாரத்தை பிரித்து எடுத்து வருவதற்காக கே.ஆர்.தோப்பூர், பாகல்பட்டி, பூமிநாயக்கன்பட்டி, மாங்குப்பை, நல்லாகவுண்டம்பட்டி, கோட்டகவுண்டம்பட்டி மற்றும் வெள்ளைக்கல்பட்டி ஆகிய கிராமங்களின் வழியாக, கருப்பூர் வரை உயர்மின் கோபுரம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் விவசாய நிலங்களில், உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டனர்.

 ஓமலூர் அருகே பாகல்பட்டி ஊராட்சி பூமிநாயக்கன்பட்டியில், உயர்மின் கோபுரம் அமைக்க பொக்லைன்களுடன், மின்சார வாரிய அதிகாரிகள் நேற்று வந்தனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள், நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மின்சார வாரிய தலைமை பொறியாளர் செல்வி, பொறியாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஏற்கனவே எங்களது நிலத்தை இரும்பாலைக்கு எடுத்து, அங்கிருந்து விரட்டி விட்டனர். இங்குள்ள நிலத்தையும் எடுத்துக்கொண்டால், நாங்கள் எங்கே போவது என விவசாயிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மாற்று பாதையில் மின் கோபுரம் அமைக்க வழிவகை இருந்தும், அதிகாரிகள் அதை புறக்கணிக்கின்றனர். அதனால், எங்கள் நிலத்தை முழுமையாக மின்சார கோபுரம் அமைக்க எடுத்து கொள்ளட்டும், இல்லாவிட்டால் நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு மாதம்தோறும் வாடகை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: