×

ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம், செப்.19: ஜெயங்கொண்டத்தில் புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொருளாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க ஆண்டறிக்கை பொது செயலாளர் முத்துக்குமரன் வாசித்தார். ஜெயங்கொண்டம் கும்பகோணம் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள பழுப்பன் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பு, சிவன் கோயில் தெப்பக்குளம் ஆக்கிரமிப்பு, ஆண்டிமடம் அகத்தீஸ்வரர் கோயில் திருக்குளம், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தூர்வாரி செப்பனிடப்பட்டு உள்ளது. அந்த ஏரிக்கரையில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் வட்டாட்சியரிடம் பலமுறை அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்க நீர்நிலை ஆக்கிரமிப்புகளை காலிசெய்ய உத்தரவு பிறப்பித்திருந்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆக்கிரமிப்புகளை உடனடியாக காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு கலைக்கல்லூரி புதிதாக அமைக்க வேண்டும். மீன் மார்க்கெட்டில் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நகரின் வெளிப்புறத்தில் நவீன முறையில் புதிதாக மீன் மார்க்கெட் கட்டிக்கொடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரை கேட்டுக்கொள்வது. ஜெயங்கொண்டம் நகரில் காந்தி பூங்கா செங்குந்தபுரம் அண்ணா பூங்கா ஆகியவற்றை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி ஆணையரை கேட்டுக்கொள்வது. பெருமாள் கோயில் அருகில் உள்ள ஆலமரத்தின் அருகில் புதியதாக பூங்கா அமைக்க வேண்டும் செக்கான்குட்டை சுற்றி நடைபாதை அமைத்து கொடுக்க வேண்டும் என உடையார்பாளையம் பேரூராட்சி அலுவலரை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பாரிவள்ளல், ராஜமாணிக்கம், மாரிமுத்து ஆகியோர் பேசினர். இறுதியில் முகம்மது சுல்தான் நன்றி கூறினார்.

Tags : Consumer Protection Association ,government ,
× RELATED விரைவு கட்டணம் வசூலிக்கும் பஸ்களின்...