×

சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் ஆடு வளர்ப்பு பயிற்சி

தா.பழூர், செப். 19: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் ஆடு வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியின் துவக்கமாக மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா வரவேற்று தூய்மை இந்தியா பற்றிய உறுதிமொழி மற்றும் பாலீத்தின் பைகள் மற்றும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விரிவாக கூறினார். ஆடு வளர்ப்புக்கு தேவையான தீவன சாகுபடியில் பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர்தீவனம் பற்றி செயல்விளக்கத்துடன் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின் கூறினார்.
மேலும் கால்நடை மருத்துவர் மகேந்திரன் ஆட்டு இனங்கள், கொட்டகை அமைப்பு, நோய் மேலாண்மை மற்றும் ஆடு வளர்ப்பு பற்றி விரிவாக கூறினார். பண்ணை மேலாளர் பிரபு பயிற்சிக்கு வந்த அனைவருக்கும் பண்ணையில் உள்ள உயர்மட்ட தரைமுறை ஆடுவளர்ப்பினை காண்பித்து விளக்கம் அளித்தார்.

பிறகு ஆடு விற்பனை மற்றும் காப்பீடு பற்றி மையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர்.அழகுகண்ணன் விரிவாக எடுத்துரைத்து பயிற்சி பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் சான்றிதழ் வழங்கினார். இப்பயிற்சிக்கு 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில் மைய தொழில்நுட்ப வல்லுநர் சோபனா நன்றி கூறினார்.

Tags : Cholamadevi Creed Agricultural Science Center ,
× RELATED சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல்...