×

அணையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் வாய்க்கால்களை தூர்வாரும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

கரூர்,செப்.19: அணையில் இருந்து நீர்திறக்கப்படுவதால் வாய்க்கால் தூர்வாரும் பணியினை விரைவுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை நீரை சேமிக்கும் வகையில் விவசாயிகளின் பங்களிப்புடன் ஏரி, குளம், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் வழித்தடங்களை தூர்வாரவும், கரைகளை பலப்படுத்தவும், குடிமராமத்து என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் கட்டளை மேட்டுவாய்க்கால், மாயனூர், மகாதானபுரம், மயிலாடி, பொய்யாமணி பகுதிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாயனூரில் காவிரியின் குறுக்கே மாயனூர் கதவணை அமைந்துள்ளது. இதன் உதவியால் தென்கரை கால்வாய், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புதுக்கட்டளை மேட்டு வாய்க்கால், கட்டளை மேட்டுவாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்கள் பயன் பெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் கட்டளை மேட்டு வாய்க்கால், புதுக்கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் கிளை வாய்க்கால், பள்ளவாய்க்கால், படுகை வாய்க்கால், சித்தலவாய், தென்கரை, மகாதானபுரம் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரவும் கரைகளை பலப்படுத்தவும் பணிகள் நடக்கிறது.

அதன் அடிப்படையில் 22கிமீ நீளம் உள்ள சின்னதாராபுரம் வாய்க்கால் ரூ.18 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்க்கால் மூலமாக சுமார் 760 ஹெட்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். பள்ளபாளையம் இடதுகரை வாய்க்கால் ரூ.35 லட்சத்தில் 45 கிமீ தூர்வாரும் பணிகள் விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் நடைபெற்ற வருகிறது. இந்த வாய்க்கால் மூலம் 1467 ஹெட்டேர் பாசன வசதி பெறும். மழைக்காலங்களுக்கு முன்பே நீர்வழித் தடங்கள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படுவதால் கடைமடைவரை மழைநீர் சென்று சேரும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமராவதி பாசன விவசாயிகள் கூறுகையில், அமராவதி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவும் அரசு முடிவு செய்துள்ளது, ஏற்கனவே தண்ணீர் திறந்துவிடப்பட்டு செட்டிபாளையம் தடுப்பணை வரை வந்தடைந்துள்ளதால் இம்முறை திறக்கப்படும் நீர் வேகமாக வந்துவிடும், இன்று (20ம்தேதி) திறக்கப்படும் நீர் நான்கு நாட்களில் கரூர் பகுதிடைய அடையும். இந்நிலையில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தண்ணீர் வந்து சேர்வதற்குள் பணியினை விரைவுபடுத்த வேண்டும். அதே சமயம் அவசர கதியில் ஏனோதானோ வேலைசெய்ய வாய்ப்பிருக்கிறது. ஒப்பந்தக்காரர்கள் முறைப்படி சிமெண்டு கலவை போட்டு வாய்க்கால் சீரமைப்பு வேலைகளை செய்வதை அதிகாரிகள்உறுதி செய்யவேண்டும் என்றனர்.

Tags : dam ,
× RELATED ராஜபாளையம் அருகே தொடர்மழையால்...