×

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடைசீட்டு வாங்காததால் பஸ்களை வெளியே விடாமல் நகராட்சி ஊழியர்கள் முற்றுகை

கும்பகோணம், செப். 19: கும்பகோணம் பஸ்ஸ்டாண்டில் நடைசீட்டு வாங்காததால் நகராட்சி ஊழியர்கள், பஸ்களை வெளியே விடாமல் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் பஸ்ஸ்டாண்டில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறது. ஒவ்வொரு பேருந்து தினமும் முதல்நடை புறப்படும்போது நகராட்சியால் நடைசீட்டு கொடுத்து ரூ.15 வரியாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல தனியார் பஸ்களுக்கும் வசூலிக்கப்படுகிறது. இதற்காக பொது ஏலம் விடப்பட்டு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வசூல் செய்யும் உரிமம் நகராட்சியால் தனியாருக்கு வழங்கப்படுகிறது.

அந்தவகையில் கடந்த 3ம் தேதி முதல் 18ம் தேதி வரை அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு நடைசீட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் பஸ்ஸ்டாண்டில் புறப்பட்ட அரசு பஸ்களை முற்றுகையிட்டு கட்டணம் செலுத்தி விட்டு செல்லுமாறு முறையிட்டனர். அப்போது பணியில் இருந்த கண்டக்டர்கள், நடைசீட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர் என்றனர். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் நேர காப்பாளர் அலுவலகத்துக்கு சென்று முறையிட்டனர். இதற்கு நேர காப்பாளர் சரிவர பதில் கூறாததால் அங்கிருந்த கூண்டை தூக்கி செல்ல முயன்றனர். இந்த தகவல் கிடைத்ததும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி பஸ்களை மறிப்பதை கைவிடுமாறு கேட்டு கொண்டனர். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து பொது மேலாளர் அனுஷத்திடம் கேட்டபோது, வட்டார போக்குவரத்து அலுவலர், பஸ்ஸ்டாண்டை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து நகராட்சி பயணிகளுக்கு செய்துள்ள இருக்கை, குடிநீர், கழிவறை, சுற்றுப்புற சுகாதாரம் போன்ற வசதிகளின் அடிப்படையில் தரச்சான்று வழங்க வேண்டும். அந்த வகையில் ஏ கிளாஸ், பி கிளாஸ் என டி வரை 4 விதமான தரச்சான்று வழங்கப்படும். ஆனால் அதுபோல் ஆய்வு செய்ததற்கான கால அவகாசம் கடந்த ஒரு மாதம் முன்பே காலாவதியாகிவிட்டது. எனவே தான் நாங்கள் 15 நாட்களாக நடைச்சீட்டு கொடுக்கவில்லை. தரச்சான்று வழங்கியவுடன் ஏற்கனவே வாங்கியதுபோல் சீட்டு வாங்கி, கட்டணம் செலுத்துவோம் என்றார்.

Tags : bus station ,Kumbakonam ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்