மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, செப். 19: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து தஞ்சை தபால் நிலையம் முன் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவின் ஒரே பொது மொழி இந்தி, உலக அரங்கில் இந்தி தான் இந்தியாவின் அடையாளம், இந்தியர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பப்பட்டது. அமித்ஷாவின் பேச்சு என்பது இந்திய கூட்டாட்சி முறைக்கும், பன்முக தன்மைக்கும் எதிரானது மட்டுமல்ல. அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். அவருடைய கருத்து சாதாரணமாக எடுத்து கொள்ள கூடியதல்ல.

தேசிய, இன, மொழிகள், பண்பாடு, மாநில உரிமைகள் மீது பாஜ அரசு தொடுத்திருக்கும் தாக்குதல். இந்தி வழியாக இந்துத்துவத்தையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சி. தமிழகம் ஒருபோதும் பாஜவின் முயற்சியை அனுமதிக்காது. எனவே அமித்ஷா தன் கருத்தை உடனே திரும்ப பெற வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் திருஞானம், மாவட்ட செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம், மாநகர செயலாளர் குருசாமி, தமிழ் தேசய மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, மாநகர செயலாளர் ஆலம்கான், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் திருநாவுக்கரசு, தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, தலைமை குழு உறுப்பினர் ராஜேந்திரன், சமவெளி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ராவணன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், தொழிற்சங்கம், விவசாய சங்க பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.

Related Stories: