புறவழிச்சாலை அமைக்ககோரி திருவையாறில் இன்று நடக்கவிருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

திருவையாறு, செப். 19: போக்வரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் திருவையாறு பகுதியில் தமிழக அரசு அறிவித்துள்ள புறவழிச்சாலை உடனடியாக நிறைவேற்றகோரி இன்று (19ம் தேதி) முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக திருவையாறு வணிகர் சங்கங்கள் மற்றும் அனைத்து பொதுநல அமைப்புகள் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளம்மாருதி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது. அரசு சார்பில் டிஎஸ்பி பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் பழனியப்பன், வருவாய் ஆய்வர் விஜயராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் சார்பில் வணிகர் நல கழகம் சார்பில் சத்தியமூர்த்தி, ராஜா, சண்முகம், மோகன், வணிகர் சங்கம் சார்பில் சாமிநாதன், விவேக், ஈ.வே.ரா மார்க்கெட் சங்கம் சார்பில் சங்கர், சவுரிராஜன், வர்த்தக சங்கம் சார்பில் திலகர், திமுக சார்பில் நகர செயலாளர் நாகராஜன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் குமணன் பங்கேற்றனர்.

கூட்டத்தில் திருவையாறு பகுதியில் புறவழிச்சாலை அமைக்க ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு நீண்ட நாள் கிடப்பில் உள்ளது. இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் ஏற்கனவே முடிவெடுத்தவாறு இன்று ஒருநாள் முழு கடையடைப்பு நடத்துவோம் என்றனர்.

இதுதொடர்பாக திருவையாறு தேசிய நெடுஞ்சாலை இளநிலை பொறியாளரிடம் எப்போது புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று கேட்டனர். அதற்கு திருவையாறு நகரத்தில் புறவழிச்சாலை அமைக்க மதிப்பீடு தயார் செய்து ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் கிடைக்க பெற்றவுடன் உடனே பணி துவங்கப்பட்டு புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்று இன்று நடக்கவிருந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Stories: