அதிகாரிகளுக்கு உத்தரவு சுவாமிமலை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் அடகு வைத்த ரூ.6 கோடி நகைகள் மாயமா?

கும்பகோணம், செப். 19: கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கார்த்திகேயன் மனைவி கோமளவல்லி என்பவர் தன்னுடைய நகைகளை ரூ.6 ஆயிரத்துக்கு கடந்தாண்டு ஜனவரி 10ம் தேதி அடகு வைத்தார். பின்னர் சில நாட்களில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக சென்றார். அப்போது அலுவலர்கள் வெளியில் சென்றுள்ளனர், சில நாட்கள் கழித்து வாருங்கள் என்றனர். பின்னர் தொடர்ந்து பலமுறை சங்கத்துக்கு சென்றும் நகையை மீட்க முடியவில்லை. இந்நிலையில் நகையை அடகு வைத்து பல மாதங்களான நிலையில் தற்போது கூடுதல் வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டிய நிலை இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நகையை மீட்டு தராவிட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என்று கோமளவல்லி கூறினார்.

இதுகுறித்து மாவட்ட கிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் விமலநாதன் கூறுகையில், சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கடன், பத்திரம் உள்ளிட்டவைகளை அடகு வைத்து கடன் பெற்று சாகுபடி செய்து வருகின்றனர். கடந்தாண்டு கடன் சங்கத்தில் இருந்தவர் மேல் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்ததால் தலைமறைவானார். இந்நிலையில் கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகளை கேட்டு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 18 மாதங்களாக அலைந்து வருகின்றனர். ஆனால் கடன் சங்க நிர்வாகம், நகை பெட்டியின் சாவியை முன்னாள் செயலாளர் திருடி சென்றுவிட்டார்.. மும்பையில் உள்ள பூட்டு நிறுவனத்திடம் கூறியுள்ளோம். ஒரு மாதத்துக்குள் நகைகளை கொடுத்து விடுகிறோம் என்றனர். விவசாயிகள் நகைகளை அடகு வைத்து 12 மாதத்துக்குள் திருப்பினால் தள்ளுபடி சலுகை உண்டு. தற்போது நகைகளை திருப்பி வழங்காததால் வட்டிக்கு மேல் வட்டி போட்டு விவசாயிகளிடம் பணம் பறிக்கும் செயல் நடைபெறும்.

கூட்டுறவு கடன் சங்கத்தில் இதுவரை ரூ.6 கோடிக்கு மேல் விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்துள்ளதாக தெரிகிறது. நகைகளை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் துணையோடு கடன் சங்க முன்னாள் செயலாளர், வெளிநபரிடம் விற்பனை செய்து விட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்துள்ளதாக தெரிகிறது. சுவாமிமலை கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் மேலதிகாரிகள் முதல் செயலாளர் வரை கூட்டு களவாணி செய்து ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகளை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. எனவே விவசாயிகளின் நகைகளை திருப்பி வழங்காவிட்டால் கூட்டுறவுத்துறை கள அலுவலர், மத்திய கூட்டுறவு வங்கி உதவி கள மேலாளர் மற்றும் கள மேலாளர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

Related Stories: