வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்து பணியாளர்களை நியமிக்க வேண்டும்

தஞ்சை, செப். 19: அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதையடுத்து வருவாய் கோட்ட அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசும்போது, வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் மாதத்தில் துவங்கவுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். வருவாய் கோட்ட அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

Advertising
Advertising

பேரிடர் காலங்களில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை முன்கூட்டியே ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மண்டல அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் தன்னார்வலர்களை முதல்நிலை பொறுப்பாளர்களாக நியமித்து அவர்களுக்கு தீயணைப்புத்துறை மூலம் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். இதைதொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் எஸ்பி மகேஸ்வரன், டிஆர்ஓ சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் மற்றும் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: