அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

வேலூர், செப்.19: அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். பள்ளி கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு பள்ளிகளில் இடை வகுப்பிலோ அல்லது இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றதன் காரணத்தாலோ மாணவர்களின் விவரம் பள்ளி தலைமையாசிரியரால் பொது தொகுப்பிற்கு அனுப்பப்படுகிறது.அவ்வாறு அனுப்பப்பட்ட மாணவர்கள் வேறு பள்ளிகளில் மேல் வகுப்பு, அதே வகுப்பு சேர்ந்தபோது புதிய பள்ளியில் மாணவர்களின் எண்ணினை மட்டும் உள்ளீடு செய்து இணைக்கப்பட்டுள்ளது. இம்முறையில் பெரும்பான்மையான மாணவர்களின் விவரங்கள் சார்ந்த பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், சில மாணவர்களின் விவரங்கள் மட்டும் இதுவரை எந்த பள்ளியிலும் இணைக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

எந்த பள்ளியிலும் இணைக்கப்படாமல் தொடர்ந்து பொது தொகுப்பிலேயே நிலுவையில் உள்ள மாணவர்களின் விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை இணையதள பக்கத்தில் மாணவர்களின் விவரங்கள், பெற்றோரின் தொலைபேசி எண்ணுடன் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தொகுப்பில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களை நகல் எடுத்து ஆசிரியர் ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும். பொது தொகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் பள்ளிகளில் பொறுப்பு ஆசிரியருடன் கூடுதலாக உபரி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த ஆசிரியர், பட்டியலில் உள்ள மாணவர்களின் பெற்றோரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அல்லது நேரடியாக மாணவர்களின் இருப்பிடம் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும்.

தற்போது மாணவர்கள் கல்வி பயிலும் விவரத்தினை கேட்டறிய வேண்டும். வேறு பள்ளியில் சேர்க்கப்படும் விவரங்கள் மற்றும் இடைநின்ற மாணவர் என்றால் அதன் விவரங்களை பட்டியலிட வேண்டும். மேலும் பட்டியலிடப்பட்ட விவரங்களை இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவு செய்து தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்டு, குறுவள மையத்திற்குரிய ஆசிரியர் பயிற்றுநரிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: