ஜோலார்பேட்டை அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஜோலார்பேட்டை, செப்.19: ஜோலார்பேட்டை அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி ஊராட்சி சின்னகுட்டூர் பகுதியில் பாட்டன்வட்டம் உள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் அடிக்கடி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் நேற்று காலை கொத்தூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்தனர். மேலும் காலிக்குடங்களுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவலறிந்த ஜோலார்பேட்டை துணை பிடிஓ கலையரசி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, 10 நாட்களுக்குள் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும், அதுவரை டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தனர். இதையேற்ற பொதுமக்கள் அரசு பஸ்சை விடுவித்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: