×

சோளிங்கரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்

சோளிங்கர், செப். 19: சோளிங்கரில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்த 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சோளிங்கர் கொண்டபாளையம் பகுதியை ேசர்ந்தவர் இந்திரா(41). இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 2 வாலிபர்கள், திடீரென இந்திராவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா திருடன், திருடன் என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பைக் ஆசாமிகளை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து வாலிபர்களை மீட்டு, காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டை சேர்ந்த வினோத்(21), ஜாவித்பாஷா(22) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 3 சவரன் செயினை மீட்டனர். இதுகுறித்து இந்திரா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வினோத், ஜாவித்பாஷா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : public ,jewelery ,Sholingar ,
× RELATED கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள்...