×

கூடுதல் தலைமை செயலாளர் தகவல் மயிலாடுதுறை அருகே 13 மாதமாக உடைந்து கிடக்கும் பாலத்தால் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை, செப்.19: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது மாப்படுகை ஊராட்சி. இந்த ஊராட்சியில் கல்லணை பூம்புகார் சாலை மாப்படுகை கலைஞர் நகர் செல்லும் வழியில் முத்தப்பன் காவிரி செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த 13 மாதத்திற்கு முன்பு உடைந்து விழுந்தது. இந்தப் பாலத்தின் வழியாகத்தான் கலைஞர் நகர் மற்றும் நாராயணபுரம் போன்ற நகர்களில் வசிப்போர் பிற இடங்களுக்கு சென்று வருகின்றனர். 200 வீடுகளுக்கும்மேல் கட்டப்பட்டு வசித்து வருவதுடன் நகர் விரிவாக்கப் பகுதி என்பதால் மேன்மேலும் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.இதற்குத் தேவையான அனைத்தும் இந்தப் பாலத்தின் வழியாகத்தான் கொண்டுசெல்ல வேண்டும். பள்ளி மாணவர்கள் செல்வதற்கும், கடைகளுக்கு சென்று வருவதற்கும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 13 மாதகாலமாக பாலத்தின் தென்பகுதியில் வசிப்போர் 1 கி.மீ தூரம் சுற்றி மெயின்சாலையை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் உடைந்ததும் அதை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கலைஞர்நகர் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் மேலாளரை சந்தித்து கோரிக்கை மனுவை வைத்தனர். வழக்கம்போல் அதை வாங்கி கிடப்பில் போட்டுவிட்டு பனைமர சாரத்தை கொண்டு தற்காலிக வழியை ஏற்படுத்தினர்.

அதுவும் போட்ட ஒரு மாதத்தில் பழுதாகி பயனற்றதாகி விட்டது. பாலம் முற்றிலும் இடிந்து விழுந்தும் பொதுமக்கள் 18 ஆண்டுகளாக அனுபவித்து வந்த பாலம் இல்லாததால் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளோம் என்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் சென்று குறை கூறினர், எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டனர். இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஒரு வாரகாலமாக அடிக்கடை மழை பெய்துவருவதாலும் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதால் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வருவதால் தற்பொழுது முத்தப்பான் காவிரியில் தண்ணீர் ஓடுகிறது, இதனால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். காலை நேரத்தில் மற்றவர்கள் உதவிக்கு இருந்து அவர்களை அழைத்துச்சென்று விடுகின்றனர், தண்ணீர் வேகமாக செல்லும்போது மாணவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஒட்டுமொத்தமாக இப்பகுதி மக்கள் மிகுந்த மன வருத்தத்திலும், விரக்தியிலும் உள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் மாப்படுகை ராமலிங்கம் கூறுகையில், உடனடியாக மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் அதிகாரிகள் இங்கே வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லை என்றால் கலைஞர்நகர் மற்றும் நாராயணபுரம் நகர் மக்கள் ஒன்றினைந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags :
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்