×

தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு பல்கலைக்கழக உத்தரவு நகல் எரிக்க மாணவர்கள் முயற்சி

திருவண்ணாமலை, செப்.19: பல்கலைக்கழக ேதர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை, செய்யாறு அரசு கலை கல்லூரி மாணவர்கள், 2வது நாளாக ேநற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், திருவண்ணாமலையில் பல்கலைக்கழக உத்தரவு நகலை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்வு கட்டணம், மதிப்பெண் பட்டியல் கட்டணம் ஆகியவற்றை பல்கலைக்கழகம் சமீபத்தில் உயர்த்தியது. இதை திரும்பி பெற வேண்டும், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, 2வது நாளாக நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி வளாகத்தின் எதிரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு தேர்வு கட்டண உயர்வை பல்கலைக்கழகம் திரும்ப பெற வேண்டும், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, தேர்வு கட்டணத்தை உயர்த்தும் பல்கலைக்கழக உத்தரவு நகலை எரிக்க மாணவர்கள் முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நகலை எரிக்கவிடாமல் தடுத்து, அதனை பறிமுதல் செய்தனர். அப்போது, போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு, மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து கலைந்து சென்றனர்.
செய்யாறு:

செய்யாறு அரசு கலை கல்லூரி மாணவர்களும் நேற்று 2வது நாளாக வகுப்புகளை புறக்கணித்த மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாசில்தார் மூர்த்தி, கல்லூரி முதல்வர் மூர்த்தி(பொறுப்பு) ஆகியோர் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இதுகுறித்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...