ஓட்டப்பிடாரத்தில் கட்டி முடித்து 5 ஆண்டாகியும் திறக்கப்படாத அவலம் காட்சிப்பொருளாக மாறிய இ சேவை மையம் அரசு பணம் ரூ.27.40 லட்சம் வீண்

ஓட்டப்பிடாரம், செப்.19: ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இ சேவை மையம் திறக்கப்படாததால் ரூ.27.40 லட்சம் வீணாகுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2013-14ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.27.40 லட்சத்தில் வட்டார அளவிலான இ சேவை மையம் கட்டப்பட்டது. கட்டி முடித்து 5 ஆண்டுகளை கடந்தும் இன்னும் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது மகளிர் திட்டப் பணியாளர்கள் திறந்து வைத்திருந்தாலும் அலுவலகம் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் ஓட்டப்பிடாரம் யூனியனில் உள்ள 56 ஊராட்சிகளின் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களால் செயல்படுத்தப்பட்டு வரும் பொது இ சேவை மையங்கள் சரிவர இயங்குகிறதா என்பதனை இங்கிருந்து கண்காணிக்க இயலவில்லை. தமிழக அரசால் பொதுமக்களின் அலைச்சலை குறைக்கும் நோக்கிலேயே அவர்களின் இருப்பிடத்திலேயே வட்டாட்சியர் அலுவலகம், யூனியன் அலுவலம் ஆகியவற்றின் மூலம் பெறக்கூடிய அனைத்து சான்றிதழ்களுக்கும் இங்கிருந்து விண்ணப்பித்து மிக எளிதாக பெறும்படியான வசதியாக மின் ஆளுமை திட்டத்தின் மூலம் இந்த இ சேவை மைய்யங்கள் கட்டப்பட்டு அதற்கான பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் பல ஊராட்சிகளில் இதுபோன்ற பொது இ சேவை மையங்கள் சரிவர திறக்கப்படாததாலும் பல  ஊராட்சிகளில் பொது சேவை மைய கட்டிடங்கள் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டியும் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. இதனால் பொதுமக்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டின் இ சேவை மையத்திற்கு இதுபோன்ற சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வருவதால் தினமும் பல மணி நேரம் காத்துக்கிடந்து விண்ணப்பிக்கும் அவலம் ஏற்படுகிறது. எனவே மக்கள் பயன் பெறும் திட்டங்கள் குறித்த விபரங்கள் கிராமப்புறங்களில் பொதுமக்களிடம் சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பொதுமக்களின் சிரமங்களை போக்க எத்தனை திட்டங்கள் அரசு கொண்டு வந்தாலும் அதனைநடைமுறைப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை தீவிரமாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்தினால் மட்டுமே இதுபோன்ற மக்களின் பயனுக்குறிய மையங்களை பாதுகாக்க முடியும். எனவே இதுபோன்று பல கிராமங்களிலும் உள்ள பொது இ சேவை மையங்களை உடனே திறந்து செயல்படவும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: