விஜயராமபுரத்தில் மனுநீதிநாள் முகாம் மக்கள் சரியாக பயன்படுத்தாததால் திருப்பி அனுப்பப்படும் நலநிதிகள்

சாத்தான்குளம், செப்.19: அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் சரியாக பயன்படுத்தாததால் அந்த நிதிகள் அரசிற்கே திருப்பி அனுப்பப்படுகிறது என விஜயராமபுரத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். சாத்தான்குளம் தாலு கா தச்சமொழி ஊராட்சிக்கு

உள்பட்ட விஜயராமபுரம் முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் ஆர்டிஓ தனபிரியா வரவேற்றார். இதில் வேளாண்துறை அலுவலர் பாலசுப்பிரமணியன், குழந்தை நலத்திட்ட அலுவலர், கால்நடை பரமரிப்பு இணை இயக்குநர் சத்தியநாராயணன், மாவட்ட சமூக நலத்திட்ட அலுவலர் தனலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட அலுவலர் சிவசங்கரன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கண்ணன், பள்ளி செயலாளர் திருமணி ஆகியோர் பேசினார். முகாமில் முன்னோடியாக பெறப்பட்ட 202 மனுக்களில் 138மனுக்கள் ஏற்கப்பட்டு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கமளித்தனர். பின்னர் கலெக்டர் 138 பேருக்கு ரூ.36 லட்சத்து 28 ஆயிரத்து 79 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,  

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மூலம் இதுவரை 12ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கு அமைச்சர் முன்னிலையில் தீர்வு வழங்கப்படும். மழைக்காலம் தொடங்க இருப்பதால் டெங்கு நோய் பரவாமல் தடுக்க வீட்டையும் கிராமத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அக்.2 முதல் நாடுமுழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் சரியாக பயன்படுத்தாததால் அந்த நிதிகள் மீண்டும் அரசிற்கே திருப்பி அனுப்பப்படுகிறது. குறிப்பாக 2பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு அவர்களது 18 வயதில் ரூ.5ஆயிரம் கிடைக்கும் திட்டத்திற்கான நிதியை பலரும் பெறவில்லை. இதுபோன்ற முகாம் மூலம் கிராம மக்களுக்கு அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி நலத்திட்டங்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து சண்முகநாதன் எம்எல்ஏ பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாணவர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஜெயலலிதாவின் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவதுடன் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கினார். அரசு அறிவிக்கும் எந்த திட்டத்தையும் முதலில் நிறைவேற்றி தருவதில் தூத்துக்குடி கலெக்டர் சந்திப் நந்தூரி முன்னிலையில் இருக்கிறார் என்றார். நிகழ்ச்சியில் சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜ், மண்டல துணை தாசில்தார் சுவாமிநாதன், சாத்தான்குளம் பேருராட்சி செயல் அலுவலர் முருகன், குடிநீர் வடிகால் வாரிய உதவி கோட்டப்பொறியாளர் ரவிச்சந்திரன், தலைமைஆசிரியர் ஜெகதீசபாண்டியன், பள்ளித்தலைவர் வேலுசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர், முன்னாள் யூனியன் தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய அதிமுக செயலாளர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். சாத்தான்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்தாசில்தார் செந்தூர்ராஜன் நன்றி கூறினார்.

Related Stories: