×

ஏரி ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திய கிராம மக்கள்

திருவெண்ணெய்நல்லூர், செப். 19: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில் அப்புறப்படுத்தினர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த ஊருக்கு சொந்தமான ஏரியை  ஆக்கிரமிப்பு செய்து அருகில் உள்ள காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலர் பயிர்செய்து வருகின்றனர். மேலும் ஏரியில் கரைகள் உடைக்கப்பட்டு கிடப்பதால் ஏரியில் மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வருவாய் துறை மற்றும் பொதுபணித்துறையிடம் கிராம மக்கள் முறையிட்டனர்.

இதையடுத்து வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியை அளவீடு செய்தனர். அதில் ஏரி சுமார் 68 ஏக்கர் பரப்பளவு கொண்டது என கண்டறியப்பட்டது. இதில் சுமார் 30 ஏக்கர் அளவில் காரப்பட்டு கிராமத்தைச்சேர்ந்த தனிநபர்கள் ஆக்கரமிப்பு செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் ஏரியை ஆக்கிரமித்து பயிரிட்டுள்ள பயிர்கள் அனைத்தையும் தங்கள் சொந்த செலவில் அதிகாரிகளின் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் ஏரியை தூர்வாரி உடைந்திருந்த ஏரிக்கரையை சீரமைத்தனர். இதன்மூலம் ஏரியில் நிறைய தண்ணீரை சேமிக்க முடியும் எனவும், இதனால் சுமார் 450 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED ஒரே வீட்டிற்குள் 123 விஷப்பாம்புகள்...