×

2வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

விழுப்புரம், செப். 19: தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  விழுப்புரம், திண்டிவனத்தில் நேற்று இரண்டாவது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளுவர் பல்கலைகழகத்தின்  கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  தேர்வுக்கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இளங்கலை  பட்டப்படிப்புக்கான ஒரு பாடத்திற்கு ரூ.68 லிருந்து ரூ.100 ஆகவும்,  முதுகலை பட்டப் படிப்பில் ஒரு பாடத்திற்கு ரூ.113லிருந்து, ரூ.160  ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு  அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  தேர்வுக்கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை  திரும்பப்பெறக்கோரியும் நேற்று முன்தினம் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம்  அறிஞர்அண்ணா அரசுக்கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.ஏழை,  எளிய மாணவர்கள் படித்து வரும் இந்த கல்லூரியில் திடீரென்று தேர்வுக்கட்டணம்  உயர்த்தப்பட்டுள்ளது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும்  புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தி திணிப்பை எதிர்த்தும்,  கல்லூரியில் அடிப்படைவசதிகளை செய்துதரக்கோரியும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதாக  மாணவர்கள் கூறினர். கல்லூரி நிர்வாகம் சார்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாத  நிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் இரண்டாவது நாளாகவும்  ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். தேர்வுக்கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற  வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரியிலிருந்து ஊர்வலமாக  புறப்பட்ட மாணவர்கள் விழுப்புரம்-புதுவை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். முன்கூட்டியே  தகவல் அறிந்த டிஎஸ்பி திருமால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் கல்லூரி சாலையிலேயே  அமர்ந்த மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். உயர்த்தப்பட்ட  தேர்வுக்கட்டணத்தை திரும்பப்பெறக்கோரி கோஷமிட்டனர். டிஎஸ்பி திருமால்  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முறைப்படி கோரிக்கையாக  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுஅளிக்கவும், இதுபோன்று போக்குவரத்துக்கு  இடையூறாக போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். பின்னர் மாணவ,  மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தேர்வுகட்டண உயர்வை கண்டித்து திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம். திண்டிவனம்: திண்டிவனத்தை அடுத்த மேல்பாக்கத்தில் உள்ள கோவிந்தசாமி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளும் தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ மாணவிகளிடம் ரோஷணை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : College students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...