×

நீர் தேங்கும் இடங்களை பராமரிக்க தவறினால் அபராதம்

புதுச்சேரி, செப். 19:   புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 புதுவை அரசு மக்களின் சுகாதாரத்தை பேணி காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அடிப்படையில் கொசுக்களால் பரவக் கூடிய உயிர்க்கொல்லி நோய்களான டெங்கு, மலேரியா மற்றும் ஜப்பானிய மூளை காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து புதுவை மக்களை காப்பாற்ற அரசானது எந்த ஒரு இடத்திலும் தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் கொசு உற்பத்தியை முற்றிலுமாக அகற்ற முடிவெடுத்துள்ளது. இதுசம்பந்தமாக புதுவை அரசு சுகாதாரத்துறை அரசாணையில் காலிமனை, மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள், உரல், வீட்டின் முகப்பில் குடிநீர் குழாயடிப்பள்ளம், திறந்த வெளியில் வீசப்படும் இளநீர் குடுவைகள், டயர், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், மூடியற்ற பாட்டில்கள், மண் பானைகள், இதர உபயோகமற்ற குழிவான தண்ணீர் தேங்கக் கூடிய பொருட்கள்,

சரிவர மூடப்படாத அல்லது மூடியில்லாத மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், வலையிடப்படாத கிணறு, மழை நீர் தேங்கும் விளிம்புள்ள ஜன்னல் கூரைகள், குளிர்சாதன பெட்டியின் பின்பகுதியில் தேங்கும் நீர், வீட்டின் உள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீர் தேங்காமல் தவிர்த்து மனித உயிரை பறிக்கும் கொசுக்களால் உருவாகக் கூடிய கொடூர நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மத்திய அரசு நீர் தேங்கும் இடங்களை பராமரிக்க தவறினால் சிறை தண்டனை விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலே சுட்டிக்காட்டப்பட்ட நீர் தேங்கும் வாய்ப்புள்ள பகுதிகளை சரிவர பராமரிக்க தவறும் பட்சத்தில் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும். எனவே, புதுவை மக்கள் தங்களின் சுகாதார நலனில் அக்கறை கொண்டு புதுவை அரசு அமல்படுத்தும் தடுப்பு நடவடிக்கை குழுவுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி உயர்க்கொல்லி நோய்களான டெங்கு, மலேரியா மற்றும் ஜப்பானிய மூளை காய்ச்சல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : water storage areas ,
× RELATED சாலைக்கிராமம் கண்மாயில் கொட்டப்படும் கோழி கழிவுகள்