×

ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் தொடர் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

பள்ளிப்பட்டு, செப். 19: பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை வட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளும், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளும், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளும் உள்ளன. பொதுவாக இந்த பகுதிகள் மலையும், மலை சார்ந்த பகுதிகளாகவே உள்ளன. இந்த பகுதிகளில், கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவியது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதனால், அனைத்து பகுதிகளிலும்  குடிநீர் பிரச்னை சமாளிக்க ஊராட்சி, ஒன்றிய நிர்வாகம் தடுமாறியது. இந்நிலையில், கடந்த ஓரிரு மாதமாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அன்றிரவு குளிர்ந்த காற்று வீசியதுடன் இரவு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று காலை 6 மணி வரை நீடித்தது. இதைத்தொடர்ந்து, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, வங்கனூர், அத்திமாஞ்சேரிப்பேட்டை, சொரக்காய்பேட்டை, ராஜாநகரம், பாலாபுரம, ஸ்ரீகாளிகாபுரம், பாண்டரவேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையின் இருபுறமும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  இதனால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இந்த மழையால் வரத்து கால்வாய்களில் நீர் வர தொடங்கியுள்ளது. குடிநீர் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு இந்த மழையால் நிம்மதியடைந்தனர்.இதேபோல், தண்ணீர் இல்லாமல் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல், தொடர்ந்து மழை பெய்தால் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னை தீரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.மேலும், பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருதால், ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி வருகிறது. கொசுகடியால்  மலேரியா, டெங்கு, விஷக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க சாலையோர பள்ளங்களை மூடவேண்டும் என்றனர்.


Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...