×

கடைகளை கணக்கெடுப்பு செய்ய என்எஸ்எஸ் மாணவர்களுக்கு பயிற்சி

புதுச்சேரி, செப். 19:   உழவர்கரை நகராட்சி சார்பில் வர்த்தக உரிம செயலி (Trade licenses App) மூலம்  கடைகள், தொழிற்சாலைகளை கணிப்பு செய்யவுள்ள என்எஸ்எஸ் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் புதுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973 பிரிவு 355ன் படி உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தகம் செய்பவர்கள் அனைவரும் நகராட்சியின் வர்த்தக உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். அதனால் உழவர்கரை நகராட்சியானது கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களை கொண்டு நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து கடை மற்றும் தொழிற்சாலைகளை இன்றும், நாளையும் கணக்கெடுப்பு செய்யவுள்ளது. இப்பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி வரவேற்றார். உள்ளாட்சித்துறை இயக்குநர் மலர்க்கண்ணன் தலைமை தாங்கி பேசியதாவது: தேர்தல் பணிக்கு மட்டும்தான் இதுவரை கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மற்ற துறை சார்ந்த பணிகளில் மாணவர்களை பயன்படுத்துவதில்லை. ஆனால், உழவர்கரை நகராட்சி மூலம் கடைகள், தொழிற்சாலைகளை கணக்கெடுப்பு நடத்தும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தவுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். எங்களது துறையில் ஊக்கத்தொகையுடன் பட்டம்  பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். எனவே, பட்டம் பெற்ற மாணவர்கள்  இப்பயிற்சி பங்கேற்று பயன்பெறலாம் என்றார்.

இதைத் தொடர்ந்து, வர்த்தக உரிம செயலி’ மூலம் கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் கணக்கெடுப்பு செய்வது, வர்த்தக உரிமம் வழங்குவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 120 பேர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடை மற்றும் ெதாழிற்சாலைகளை கணக்ெகடுப்பு செய்ய வரும் மாணவர்களிடம் கடை, தொழிற்சாலையின் உரிமையாளர்கள் இந்நகராட்சியால் வழங்கப்பட்ட தங்களது வர்த்தக உரிமத்தை காண்பிக்கவும். அவ்வாறு வர்த்தக உரிமம் இல்லாதவர்கள் தங்களது கடையில் நடைபெறும் வர்த்தகத்தின் வகை, கடையில் பணி செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கை, சொந்த இடமாக இருந்தால் சொத்து வரி செலுத்திய ரசீது, வாடகை இடமாக இருந்தால் சொத்து வரி விதிப்பு எண் ஆகியவற்றை கணக்கெடுப்பு செய்ய வரும் மாணவர்களிடம் அளித்து நகராட்சியின் வர்த்தக உரிமம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : NSS ,shops ,
× RELATED என்எஸ்எஸ் திட்ட முகாம்